ஆயில் கதை
" இன்னும் ஒரு நாள் ஓட்டியிருந்தாலும், இஞ்சின் சீஸ் ஆகியிருக்கும்!" இருசக்கர வாகன பழுது பார்ப்பவர் சொன்ன போது, குற்ற உணர்வு ஒன்று மேலெழும்பி வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மெல்லிய கருப்பு நூல் ஒன்று, இஞ்சின் அடியிலிருந்து கிளம்பி பிளாஸ்டிக் ட்ரேயில் இறங்கி, துளிகளாகக் குறுகி சொட்டிக் கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தேன். எப்போதும் இது போலத் தான் ஆகின்றது. தினமும் ஐம்பது கிலோமீட்டர்கள் பணி நிமித்தமாய் பயணம் செய்ய வேண்டியுள்ளது. சிறு கிராமங்கள் ஊடே, வளைந்து நெளிந்து செல்லும் சாலை. எப்போதும் நான் கணிக்கும் திசைக்கு எதிர்த் திசையில் ஒதுங்கும் ஆடுகள், நகராமல் அடம் பிடிக்கும் மாடுகள், சாலையோரத்தில் மண்ணைக் கிளறிக் கொண்டிருக்கும் கோழிகள், தவிட்டுக் குருவிகளை சிதறவிட்டபடி வண்டி ஓடிக்கொண்டே இருக்கின்றது. ஆயில் மாற்ற வேண்டிய கிலோமீட்டர்கள் மறந்து, அதையும் தாண்டி போய்க்கொண்டிருக்கின்றது. காலை சரியான நேரத்திற்குச் செல்ல வேண்டும், மாலை அந்தப் பேருந்தைப் பிடிக்க வேண்டும். இந்த இரண்டு சிந்தனைகளுக்கு மத்தியில் ஆயில் பற்றி எங்கே நினைப்பது? புதிய ஆயில் குப்பியைத் திறந்து ஊற்றத் த...