வாசிப்பின் பாதை-2
தினமலர் இலவச இணைப்பாக வரும் சிறுவர் மலர் இதழுக்காக வீட்டின் எதிரில் உள்ள பெட்டிக் கடையில் காத்திருந்து வாசித்த படக்கதைகள், டீக்கடையில் சிந்துபாத் என எல்லாமும் பால்யகால சகியாய் இதயத்தோடு நெருக்கமாய் இருந்தவை. ஊருக்கு ஒரே ஒரு தொலைக்காட்சி மட்டுமே இருந்த காலத்தில் இலவச இணைப்புகள், காமிக்ஸ் புத்தகங்கள் வாசிப்புப் பழக்கத்திற்கு விதை போட்டவை. நான்கு பேர் சேர்ந்து அமர்ந்து மாயாவி கும், கும் என்று குத்தினார். அவன் தாடையில் கபால முத்திரை பதிந்தது என படித்த நினைவுகள் இனிமையானது.
ராணி காமிக்ஸின் கதைகளை விட முத்து, லயன் காமிக்ஸ் கதைகள் வித்தியாசமாய், ஆர்வத்தைத் தூண்டும் கதைகளாக இருந்தன. டெக்ஸ் வில்லர் அன்றும் இன்றும் விற்பனை, ரசிகர் கூட்டம் ஆகியவற்றில் சிறந்த நாயகராக திகழ்கிறார். இரும்புக்கை மாயாவி, டைகர், லக்கி லூக், கிட் ஆர்ட்டின், என பல நாயகர்கள் இருந்தாலும் டெக்ஸ் வில்லருக்கு இணையாக மனதைக் கவர்ந்தவர் குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடர் தான். வானில் பறக்கும் ஹெலி கார், வலைத் துப்பாக்கி, எப்போதும் பறக்கும் ஜெட்டை முதுகில் சுமந்தலையும் ஸ்பைடரும் அவர் குழுவினரும் செய்யும் சாகசங்கள் எப்போதும் மறக்காது. இரும்பு மனிதன் ஆர்ச்சியும் நினைவை விட்டு நீங்காத கதைகள்.
படக்கதைகளிலிருந்து மெல்ல மெல்ல மனது விலகத் தொடங்கியது. மாத நாவல்கள் பெருகிக் கிடந்த காலம். கடைகளில் காமிக்ஸ் கிடைப்பது குறைந்து கடைசியில் நின்று போனது. மாத நாவல்கள் எங்கெங்கும் கிடைத்தன. காமிக்ஸ், மாத நாவல்கள் இவை இரண்டிற்கும் இடையே இணைக்கும் கண்ணியாய் வார இதழ்கள் விளங்கின.
- மேலும்.

Comments
Post a Comment