இரவு - ஜெயமோகன்.
சன்னல்களில் திரை போட்டு மறைத்தும் 42 டிகிரி செல்சியஸ் வெயில் அறை முழுக்க வெப்பத்தை, ஒளியை பாய்ச்சுகிறது. உடல் முழுக்க வியர்வை கசிந்து கொண்டே இருக்கின்ற வெப்பத்தில், இவை பற்றிய எந்தவொரு உணர்வும் வராத அளவிற்கு வாசிப்பில் கட்டிப் போட்டு பிணைத்துக் கொண்ட கதை.
இரவில் விழித்தும் பகலில் உறக்கமும் கொள்ளும் இரவுலாவி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சில மனிதர்கள் பற்றிய கதை. இரவு வாழ்க்கையின் மேன்மைகளைப் பற்றி, இரவில் இயற்கையும், பொருட்களும் கொள்ளும் அழகைப் பற்றி, இரவு வாழ்க்கையில் எல்லா உயிரினங்களும் எப்படியெல்லாம் மகிழ்ச்சியோடு இருக்கின்றன என விவரிக்கும் இடங்களில், அவ்வாழ்க்கையை நாமும் வாழ்ந்து பார்க்க ஆசையும் ஏக்கமும் எழுகின்றது.
கேரளாவின் காயல் அதில் ஒடும் படகுகள், தென்னை மரங்கள் போன்றவை இரவு நேரத்தில் எத்தனை அழகாய் உள்ளன என்பதை சிறப்பான வர்ணனைகள் மூலம் கூறும் விதம் மயக்குகிறது. முதல் அத்தியாயம் முடிவதற்குள்ளாகவே நமது கவனத்தைக் கதை அள்ளி எடுத்துக் கொண்டு வேகமாக பறக்கிறது.
கதையின் ஊடாக வரும் இரண்டு யட்சிகள் அவர்களோடு உருவாகும் காதல் அதன் பின்னணியில் நாயகனின் மனம் கொள்ளும் வேதனைகள், ஆசிரமத்தில் நடக்கும் சடங்குகள் என கதை இறுதிவரை சோர்வில்லாமல் போகின்றது.
பெரிதாய் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு அத்தியாயம் வாசிக்கும்போதும் உடன் வர, கதையின் உச்சம் ஒரு கொலையில் வந்து நின்றது சிறிது ஏமாற்றத்தினை அளித்தது தான்.
காடு நாவலுக்குப் பிறகு கடைசி வரை ஆர்வம் குன்றாமல் வாசித்த நாவல் இது. வெளியே வந்து பார்த்தபோது வெயில் பளீரிட, கண்கள் கூசுகின்றன. சூரியனின் வெப்பம் தாங்கவியலாதபடி தகிக்கின்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு இலையைக் கூட காணவில்லை. நாவல் கூறியது உண்மை தான். இரவு வாழ்க்கைக்கு திரும்பி விடலாமா என மனது மயங்குகின்றது. இருநூற்று நாற்பது பக்கங்கள் கொண்ட அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். இதை எழுதி முடித்த பிறகே அடுத்த புத்தகத்தை வாசிக்க எடுக்க முடிந்தது.
நாவலிலிருந்து சில வரிகள்.
'எந்தப் பகலிலும் இரவு இருந்துகொண்டிருக்கிறது ஒவ்வொன்றுக்கும் கீழே அழுந்தி ஒவ்வொன்றுக்கும் பின்னால் பதுங்கி மௌனமாகக் காத்திருக்கிறது.'
"இப்டி யோசிச்சுப்பார், இந்த நாகரீகம் பண்பாடு இன்றைக்குள்ள வாழ்க்கை எல்லாத்தையும் ஒரு நகரம்னு வைச்சுக்கோ. நகரத்தை சுத்தி இருக்கிற காடு அதோட மறுபக்கம். நகரத்துக்கு பகலிலே வாழ்க்கை, காட்டுக்கு ராத்திரியிலே வாழ்க்கை. இது வெளுப்புன்னா அது கறுப்பு. இதோட மறுபக்கம் அது.” அவர் இன்னொரு சிகரெட் பற்ற வைத்தார். "உனக்கு இங்க உள்ள இயந்திரங்கள், கார்கள், அழுக்கு, புகை, சத்தம், தூசு, நெரிசல், குப்பைக்கூளம், நாத்தம் எல்லாம் வேணும்னா நீ பகலைத் தேர்ந்தெடுக்கணும். அதுக்கெல்லாம் மறுபக்கம் வேணும்னா ராத்திரியத்தான் தேர்ந்தெடுக்கணும். நானும் இவளும் ராத்திரியே போதும்னு முடிவு கட்டினோம்."
"இந்த மூன்று காரணங்களில் முதல் இரண்டு காரணங்களுக்காக யார் மனம் திரும்புகிறார்களோ அவர்கள் கண்டிப்பாகத் திரும்பிச் சென்றுவிடுவார்கள். ஏனென்றால் ஒருமுறை மனம்திரும்பி சில நல்ல விஷயங்களைச் செய்ததுமே அவர்களின் குற்றவுணர்ச்சி போய்விடுகிறது. இதில் என்னைப் போன்ற பாதிரியார்கள் வேறு அவர்களிடம் நீ செய்தவை எதுவும் பெரிய தப்புகள் இல்லை என்று சொல்லிவிடுவோம். அதைப் பொறுக்கிக் கொள்வார்கள். பிரச்சினைகளை அஞ்சி மனம் திரும்புகிறவர்கள் சில நாட்களிலேயே அலுப்பு கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். ஏனென்றால் அந்தப் பிரச்சினைகள் தான் அவர்களின் முழுமையான ஆற்றலைச் செலவிட்டு அவர்கள் செய்யவேண்டிய செயல்கள். எப்போது மனித ஆற்றல் வெளியே வருகிறதோ அப்போதுதான் அவன் மகிழ்ச்சியாக இருப்பான். பிரச்சினைகள் இல்லாத சலிப்பில் இருந்து வெல்ல திரும்பவும் தவறுகளுக்குச் செல்வான். பாவத்தில் இருக்கும் ஈர்ப்பு இருக்கிறதே அது சாதாரணமானதல்ல. பாவமளவுக்கு உயிர்த்துடிப்பான இன்னொன்று கிடையாது. பாவம் அளவுக்கு நம்மை மூழ்கடிக்கும் வல்லமை வேறு எதற்குமே கிடையாது. சொல்லப்போனால் லூசிஃபர் ஏசுவை விட மகத்தானவன்."

Comments
Post a Comment