அரூபப் பறவை.
மனம் வெறுமையாய் இருக்கும்போது அவ்வப்போது காவேரி ஆற்றின் கரையில் நிற்பதுண்டு. எதிரே அம்மா மண்டபம் படித்துறை தெரிய, இரண்டு கரைகளுக்கும் நடுவில் மணல் பெருகி, மின்னிக்கொண்டு கிடந்தது. ஊடே கோரையும் அதன் தலையில் வெள்ளை நிறப் பூக்களும். ஆற்றின் நடுவில் நீரேற்றும் நிலையத்தை சுற்றிக் கொண்டு தண்ணீர் கொஞ்சமாய் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு இடப்பக்கம் தூங்குமூஞ்சி மரமும் அருகில் அடர்த்தியாய் மாமரமொன்றும் நின்று கொண்டிருந்தன. மாமரம் பிஞ்சுகளால் நிறைந்து கிடந்தது. காற்றில் சேர்ந்தாற்போல் கிளையில் பிஞ்சுகள் அசைவது அழகாய் இருந்தது, சிறு குழந்தைகள் ஒன்றாய் கைகோர்த்துக் கொண்டு ஆடுவது போல. தவிட்டுக் குருவிகள் சிலவும், அணில்களும் கிளைகளுக்கிடையே தாவிக் கொண்டிருக்க, அவைகளின் ஒலிகளுக்கிடையே இதுவரை கேட்காத பறவை ஒன்றின் ஓசை மெல்லியதாய் கேட்டது.
அருகிலிருந்த தூங்குமூஞ்சி மரத்திலிருந்து அணில்கள் மாமரத்திற்கு குதித்து இலைகளை அசைத்துக் கொண்டும் சத்தமிட்டுக் கொண்டுமிருக்க, அப்பறவையின் ஒலியைக் கொண்டு இருக்குமிடத்தை அறிய முடியவில்லை. சிறிது நேரம் உற்றுக் கவனித்ததில் மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் தென்பட்டனவே ஒழியப் பறவையைக் கண்டறிய இயலவில்லை.
நெடுநாட்களாக பைனாக்குலர் ஒன்று வாங்க வேண்டும் என்பது ஆசை. கையில் இருந்திருப்பின் இந்த பறவையைக் கண்டுபிடித்திருக்கலாம். காற்றில் அத்தனை இலைகளும் அசைந்து கொண்டிருக்க, அவற்றினிடையே கண்டுபிடிக்க கடைசி வரை இயலவில்லை. அரூபப் பறவை ஒலியைக் கசியவிட்டுக் கொண்டேயிருக்கிறது. மனம் அடுத்த ஒளியைத் தேடி நகர்ந்து கொண்டது. மரத்திலிருந்து பழுத்த இலைகள் விழுந்து கொண்டிருந்ததை கவனித்தேன். இலைகள் மரத்திலிருந்து விடுபடும்போது தான் அந்த ஒலி எழுகின்றது. இலைக்காம்புகள் கடைசியாய் மரத்தைத் தழுவி தான் கடைசிப் பயணத்தைத் தொடங்கும்போது எழுப்பும் ஓசை. விடைகொடுக்கும் முகமாய் மரம் தட்டிக் கொடுக்கும் இசை. இலைகள் பறக்கும்போது எழும் ஒலி. விடுபடும் ஆன்மாவின் இசை.
இறுதி வரை அந்தப் பறவையின் பிம்பம் கிட்டவில்லை.

Comments
Post a Comment