பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு



இரண்டே நாட்களில் பூக்குழி நாவலை வாசிக்க முடிந்தது. அளவில் சிறிய நாவல். கதையும் சிறியதே. நீட்டி எழுதப்பட்ட சிறுகதை போலவே உள்ளம் உணர்ந்தது. இதற்கு முன்  மாதொரு பாகன் மட்டுமே வாசித்திருக்க, இந்நாவலை இந்த வாரம் வாசிக்கத் தொடங்கினேன். ஆணவப் படுகொலை நடக்கும் மேற்கு மாவட்டங்களில், ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. குமரேசன், வேற்று சாதியைச் சார்ந்த சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அழைத்து வருகிறான். தினமும் நெல்லாஞ்சோறு சாப்பிடக் கூட வழியில்லாத கூரை வீடுகளில் வாழும் மனிதர் மனங்களில் சொந்த சாதிப் பெருமை கோபுரம் கட்டிப் பாதுகாப்பாய் வாழ்கிறது. தாய், மாமன்கள், அப்புச்சி என எல்லாரும் சரோஜாவை வெறுப்பால் விரட்டுகிறார்கள். சிறிய டவுனில் சந்தோசமாய் வாழ்ந்தவள் இந்த பாறைக்களத்தில் குமைந்து, நசிந்து குமரேசன் அன்பை மட்டுமே பிடித்துக் கொள்கிறாள். திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஊர் கூட்டத்தில் குமரேசன் குடும்பத்தைத் தள்ளி வைக்கிறார்கள். சரோஜாவின் சாதியையும் தெரிந்து கொள்கிறார்கள். திருவிழாவிற்கு முன் ஊரை சுத்தப்படுத்தி விட வேண்டுமென சரோஜாவை கொல்வதற்கு முடிவெடுக்கப்படுகிறது. சோடா கடை போடுவது தொடர்பாக முருகேசன் வெளியூர் சென்ற நேரத்தில், இருட்டு கட்டியவுடன் படை திரண்டு வருகின்றது. இயற்கை அழைப்பிற்காக குறுங்காடு போல இருக்கும் புதருக்குள் சென்றவள் கூட்டம் பேசுவதைக் கேட்டு அவர்களின் கொடூர எண்ணத்தைப் புரிந்து கொண்டு அங்கேயே ஒளிந்து கொள்கிறாள். பாம்புகள், விஷப் பூச்சிகள் நிறைந்த புதருக்குள் அங்குலம் அங்குலமாக நகர்ந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நகர்கிறாள். அவளின் சிவப்பு வண்ண  மேனி கதை முழுக்க எல்லோராலும் பேசப்பட, அதை கிழித்துண்ண முடியாமல் போய்விட்டதென இருவர் பேசுகிறார்கள். புதரோடு தீ வைக்கிறார்கள். இருட்டில் அவள் நகர்ந்து கொண்டே இருக்கிறாள். குமரேசன் வருவானா? வந்து அவளைக் காப்பாற்றினானா? இல்லை அந்தப் புதரே அவளுக்குப் பூக்குழியாய் போனதா? சமகாலத்தில் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை நாவலாக ஆக்கியுள்ளார்.  இடையிடையே வரும் குமரேசன் சரோஜாவை காதலித்த அத்தியாயங்கள் சோர்வை அளிக்கின்றன. விவரணைகள், உரையாடல்கள் சிறப்பாக உள்ளன. சிறிய கதையை விரித்து நாவலாக எழுதுவதற்காகவேனும் ஆசிரியரின் பிற படைப்புகளை  வாசித்துப் பார்க்க வேண்டும். 

Comments

Popular posts from this blog

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.