அஞ்சலி இந்திரா சௌந்தரராஜன்.


 

பள்ளிப் பருவத்தில் கோடை விடுமுறைக்கு திருப்பூர் செல்வதற்காக அமர்ந்திருந்த பேருந்தின் சன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போது, சத்திரம் பேருந்து நிலையத்தில் கடையை மறைக்கும் அளவில் மாத நாவல்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவைகளில் மாணிக்க நாகம் என்ற தலைப்பு ஈர்க்கவே, இறங்கி வாங்கினேன்.

இலக்கிய வாசிப்பிற்கு முந்தைய காலத்தில் ராஜேஷ் குமார், சுபா என்று வாசித்துக் கொண்டிருந்த வேளையில், கொல்லிமலை சித்தர்கள், இரசவாதம், மாணிக்கம் கக்கும் நாகம், மர்மம், அமானுஷ்யம் என்று சுவாரஸ்யமாய் இருந்தது அந்தக் கதை. அதன் பின் பழைய புத்தகக் கடைகளில் இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்களைத் தேடித் தேடி வாசித்தது மனது. எது நிஜம்? என்று பெரும்பாலான கதைகள் முடிவை நம்மிடம் விட்டுவிடுபவையாக இருக்கும்.

அவர் கதைகள் ஆன்மிகத்தில் உழன்று கொண்டே இருந்தது ஒரு கட்டத்தில் சலித்துப் போனது.  மாத நாவல்களில் வந்த கதைகளை விட, குங்குமம், ஆனந்த விகடன் போன்ற வார இதழ்களில் அவர் எழுதிய தொடர்கள் அவ்வயதில் வாசிக்க உகந்த கதைகளாக இருந்தன. விட்டுவிடு கருப்பா, கோட்டைப்புரத்து வீடு, ஐந்து வழி மூன்று வாசல், மாய நிலவு இந்த நான்கு கதைகளும் தொடர்களாக வந்தவைகளில்  மிகப் பிடித்தவை. ஒவ்வொரு அத்தியாயம் தொடங்குமுன் கொடுக்கும் குறிப்புகள், சித்தர் பாடல்கள் சுவாரசியமானவை. தொடத் தொடத் தங்கம் தொடரில் வந்த இரசவாதம் செய்வது தொடர்பான சித்தர் பாடல் குறிப்புகள் குறிப்பிடத்தக்க ஒன்று.

வாசிப்பின் படிநிலைகளில் ஒரு பருவத்தில் நிறைந்திருந்தது அவர் கதைகள். இளம் பிராயத்தில் இருந்தவர்கள் நினைவுகளாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள். காலம் நகர்ந்து கொண்டே இருக்கின்றது.  இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுக்கு அஞ்சலி.


Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.