ஆயில் கதை
"
இன்னும் ஒரு நாள் ஓட்டியிருந்தாலும், இஞ்சின் சீஸ் ஆகியிருக்கும்!"
இருசக்கர வாகன பழுது பார்ப்பவர் சொன்ன போது, குற்ற உணர்வு ஒன்று மேலெழும்பி வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மெல்லிய கருப்பு நூல் ஒன்று, இஞ்சின் அடியிலிருந்து கிளம்பி பிளாஸ்டிக் ட்ரேயில் இறங்கி, துளிகளாகக் குறுகி சொட்டிக் கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தேன். எப்போதும் இது போலத் தான் ஆகின்றது. தினமும் ஐம்பது கிலோமீட்டர்கள் பணி நிமித்தமாய் பயணம் செய்ய வேண்டியுள்ளது. சிறு கிராமங்கள் ஊடே, வளைந்து நெளிந்து செல்லும் சாலை. எப்போதும் நான் கணிக்கும் திசைக்கு எதிர்த் திசையில் ஒதுங்கும் ஆடுகள், நகராமல் அடம் பிடிக்கும் மாடுகள், சாலையோரத்தில் மண்ணைக் கிளறிக் கொண்டிருக்கும் கோழிகள், தவிட்டுக் குருவிகளை சிதறவிட்டபடி வண்டி ஓடிக்கொண்டே இருக்கின்றது. ஆயில் மாற்ற வேண்டிய கிலோமீட்டர்கள் மறந்து, அதையும் தாண்டி போய்க்கொண்டிருக்கின்றது. காலை சரியான நேரத்திற்குச் செல்ல வேண்டும், மாலை அந்தப் பேருந்தைப் பிடிக்க வேண்டும். இந்த இரண்டு சிந்தனைகளுக்கு மத்தியில் ஆயில் பற்றி எங்கே நினைப்பது?
புதிய ஆயில் குப்பியைத் திறந்து ஊற்றத் தொடங்கினார் அவர். நிதானமாய், தனக்குரிய நேரத்தை எடுத்துக் கொண்டு, பொன்னிற திரவம் இறங்கிக் கொண்டிருந்தது. அதன் பாகுத் தன்மையில் ஏதோ ஒன்று மறைந்துள்ளது. அதை பார்க்கும் போதெல்லாம் மனதுக்கு இதமாய், இனிமையான உணர்வைக் கொடுக்கின்றது.
சில நொடிகள் எவ்வித அசைவுமில்லை. காலம் உறைந்து போன மயக்கத்தைத் தந்தது. "குறைந்தது பத்தாயிரத்திற்கு மேல் ஆகியிருக்கும்!" "தப்பிச்சீங்க..," எனச் சொல்லும் போதே, அவர் கேட்டத் தொகைக்காக, ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்துக் கொடுத்தேன். மீதமென பத்து ரூபாய் கொடுத்து, உடன் இலவசமாய் சக்கரங்களில் காற்று நிரப்பித் தந்தார்.
"ஒரு அஞ்சாறு கிலோமீட்டருக்கு வண்டிய விரட்டாமப் போங்க..!" தலையசைத்து விட்டு வண்டியைக் கிளப்பினேன்.
நேற்று கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் வரை விடாது தன் கோரைப் பற்களைக் காட்டிக்கொண்டு விரட்டிய, காது கிழிந்த, வெள்ளையில் செம்பழுப்புப் புள்ளிகள் கொண்ட நாயால், தப்பிப் பிழைத்தது வண்டி.

Comments
Post a Comment