மிஷன் தெரு - தஞ்சை ப்ரகாஷ்.
இந்த வார இறுதியில் தஞ்சை ப்ரகாஷின் மிஷன் தெரு வாசித்து முடித்தேன். தஞ்சை பகுதியில் பிரிட்டிஷார், முகலாயர், மராட்டியர் மூவரும் அதிகாரத்திற்காக போட்டியிடும் காலக்கட்டத்தில் நடக்கும் கதை. மன்னார்குடி சுற்றுவட்டாரத்தில் எஸ்தர் என்ற கதைநாயகியின் வாழ்வினை விவரிக்கும் விதமாய் விரியும் நாவல், அக்காலகட்டத்தில் மக்கள், குறிப்பாக பெண்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை நாவலின் மூலம் உணர முடிகிறது. அக்காலத்தில் சாதிப் படிநிலைகள் இயங்கும் விதம், கிறிஸ்துவ மிஷனரி மெல்ல மக்களிடையே பரவும் வரலாறு போன்றவை இக்கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். அக்காலத்தில் சாதாரண மக்களின் அவலநிலையினை, தற்போதைய நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது சுதந்திரம் எத்தனை சுகமான ஒன்று என்பதை விளங்கிக் கொள்ளலாம். அளவில் சிறிய நாவல், இளம்பருவத்தில் தொடங்கி, இளமையின் கொந்தளிப்பில் தவித்து, எங்கெங்கோ ஓடி இறுதியில் எஸ்தர் ஒரு தாயென மாற்றம் பெறுவதோடு முடிகிறது. கதை நடைபெறும் காலத்தின் விவரணைகள் நன்றாக இருந்தது. எஸ்தரின் மனவோட்டங்கள், வேதனைகள், தவிப்புகள் எல்லாமும் சிறப்பாக கூறப்பட்ட கதை. வாசிக்க வேண்டிய ஒன்று.

Comments
Post a Comment