நினைவுப் பாதையில் ஒரு கொசு.

நினைவுப் பாதையில் ஒரு கொசு.
================================





கார்முகில் புத்தக நிலைய அடுக்குகளில், அழகாய் சாய்ந்து நிற்கும் பல நூறு நூல்களுக்கிடையே புத்தகங்களைத் தேடும் போதெல்லாம் நினைவுப் பாதை கைகளில் தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கும். முதல் முறையே உள்ளே நுழைய இயலாததால், வாசிக்காமல் திருப்பி அளித்த நூல். அதன் பிறகு, வாசிக்க வேண்டும் என்ற ஆசை அவ்வப்போது தலைக்காட்டி, நான்கு முறை வீட்டிற்கு  எடுத்து வந்தும் என் தோல்வியை தன்னோடு எடுத்துக் கொண்டு, மீண்டும் அடுக்குகளில் சென்று அமர்ந்து கொண்டது. ஐந்தாவது முறையாக கடந்த வாரம் சனியன்று மீண்டும் எடுத்து வந்தேன்.

புத்தகத்தைத் திறந்து இரண்டு பக்கங்கள் வாசித்தால், எண்ணங்கள் எங்கெங்கோ செல்லத் தொடங்கிவிடும். நினைவுப் பாதை என்ற தலைப்பு அப்படி செய்கிறதா என்றெல்லாம் யோசித்திருந்தேன். இந்த முறை மீண்டும் முதலிலிருந்து தொடங்கி, மெல்ல மெல்ல நினைவுப் பாதையில் நகர்ந்து செல்லத் தொடங்கிவிட்டேன். இப்போது நகுலனும் நவீனனும் பின்னே நானும் என சேர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டோம்.

முதல் அத்தியாயம் இன்னும் முடியாத  முப்பதாவது பக்கத்தில் எப்போதோ நசுங்கி இறந்த கொசு ஒன்று பதப்படுத்தப்பட்டுக் கிடந்தது. இரவில் வாசிக்கப்படும் புத்தகங்கள்
கொசுக்களின் கொலைக் களமாக மாறுகின்றன. சொற்களில் எளிதாக சிக்கிக் கொள்கின்றன அவைகளின் கால்கள். சொற்களின் வலையில் மாட்டிக் கொண்ட என்னைப் போலவே. 

நினைவின் அடுக்குகளைத் துழாவிப் பார்க்கும் போது எத்தனை அர்த்தமற்ற சொற்களை கடந்து வந்திருக்கிறேன். அந்த சொற்களின் வழியாக, அம்மனிதர்களை மனம் எண்ணத் தொடங்குகிறது. அவர்களின் முகங்கள் ஞாபங்களாய் எழுந்து வருகின்றது. அச்சொற்களை உதிர்த்தபோது அவர்களின் முகங்களில் தளும்பிய உணர்வுகள் எல்லாம் புகையாய் எழுகின்றது.
எண்ணிக் கோர்க்கப்பட்ட சொற்களில்தான் எளிதில் சிக்கிக் கொள்கிறோம். மாட்டிக் கொள்ள வேண்டுமென்றே கண்ணிகள் வைத்து பின்னப்படுகின்றன சொற்களின் வலைகள். அவர்கள் அக்கலையில் தேர்ந்தவர்களாய் இருக்கின்றனர்.

கொசுக்களை விட ஈக்கள் விவரமானவை அல்லது வாசிப்பை வெறுப்பவை. அவை காலி தேநீர்க் கோப்பைகளோடு ஒதுங்கிக் கொள்கின்றன. எனக்கு முன்னால் சென்ற கொசு, உயிரை விட்டது எதனாலோவென சிந்தித்துக் கொண்டு அங்கேயே நின்று விடுகிறது மனது. இப்படித்தான் ஆகின்றது ஒவ்வொரு முறையும். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. முப்பது பக்கங்கள் நகர்ந்துவிட்டன. எதிரே நினைவுப் பாதை முடிவிலியாய் நீண்டு கிடக்கின்றது. சுழற்பாதையில் சிக்கிக் கொண்டு மீண்டும் முதல் பக்கத்திற்கு திரும்ப உத்தேசமில்லை இம்முறை.

Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.