வாசிப்பின் பாதை -1

 


தெப்பக்குளத்திற்கு செல்லும் இரண்டு பாதைகளில் வாணப்பட்டரை மாரியம்மன் கோவில் போகும் வழியில் ஒரு கடை, நாகநாதர் கோயில் வாசலில் ஒன்று என இரண்டு பழையப் புத்தகக் கடைகளையும் மறக்கவியலாது. பால்ய காலத்தில் என் வாசிப்பின் ஊற்றாக அந்த கடைகளை குறிப்பிடுவேன். மலை மலையாய் ராணி காமிக்ஸ் பெருகிக் கிடக்கும் கடைகள் அவை. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் விலையில் புத்தகங்களை வாங்கிக் கொண்டு படித்துவிட்டு திரும்பக் கொடுத்தால் ஐம்பது பைசா வாடகையாக கழித்துவிட்டு மீதித் தொகையை தருவார்கள். எவ்வளவு தேடினாலும் ராணி காமிக்ஸ் தவிர மீதி புத்தகங்களை கண்டுபிடிக்க முடியாது. லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் போன்றவை அங்கே இருந்திருக்கும். ஆனால் எனக்கெல்லாம் கிடைக்கவே இல்லை. கடை திறக்குமுன் சென்று காத்திருந்து தேடினாலும் கிடைத்ததில்லை. இதைத்தவிர அம்புலி மாமா, கோகுலம் தளிர் போன்றவை அவ்வப்போது கிடைக்கும். பார்வதி சித்திரக் கதைகள் புத்தகம் அரிதாக தென்படும். வார விடுமுறை நாட்களில் சென்று குவிந்து கிடக்கும் ராணி காமிக்ஸ்களில் படிக்காத புத்தகங்களைத் தேடி எடுக்கும்போது வரும் உணர்வுகள் இன்றும் பசுமையாய் வந்து போகிறது. முகமூடி வீரர் மாயாவி புத்தகங்கள் தான் அதிகமாகக் கிடைக்கும், விண்வெளி வீரர் பிளாஷ் கார்டன் அரிதானவர். புரூஸ் லீ கதைகள் வந்த புத்தகங்கள் மிகப் பழமையானதாய் இருக்கும்.






அபாயக் கோள் என்றொரு கதை. எந்தவொரு தெரிந்த ஹீரோவும் அதில் இல்லை. ஆனால் அடிக்கடி படித்த புத்தகம். கிடைக்கும் போதெல்லாம் வாசித்த நினைவு. "புக்கு மாத்த போலாமா டா?" என்ற வார்த்தைகள் அத்தனை இன்பமானதாய், உற்சாகமூட்டும். நாயைத் தேடி என்ற ஒரு ராணி காமிக்ஸ் இப்போதும் வாசிக்கக் கிடைக்காதா என ஏங்க வைக்கும் புத்தகம் அது. 

                                  - தொடர்வேன்.

Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.