3. தினமும் தோன்றுவதில்லை வானவில்.

 


சமயபுரம் டோல்கேட்டில், காலை 6.50 க்கு பஸ். எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் கொள்ளிடம் பாலத்தைத் தாண்டிக் கொண்டிருந்தேன். பாலத்தின் இரு புறமும் பிரம்மாண்ட ஓர வளைவுகள், தூண்களோடு வேகமாகக் கடந்து சென்றன. கீழே காவிரியின் உபரி நீரை முக்கொம்பு மேலணையில், கொள்ளிடத்தில் திருப்பி விட்டதால், இரு கரையும் நிறைத்து, ஒரு பழுப்பு நிற யானையைப் போல, மெல்ல அசைந்து நகர்ந்து கொண்டிருந்தது.

மென் தூறலும், ஈரமும் துணையாக வர, சில்லென்று வீசும் ஈரக்காற்றில் அவசரக் குளியலின் ஈரம் காய்ந்தது. வண்டியை ஸ்டாண்டில் விட்டு, எடை மிகுந்த பேரங்காடி பையுடன் நிறுத்தத்தை அடைந்தேன். முதுகில் ஒரு பை.

அங்கேயே உள்ள பூக்கடையில்
பொன்னிறத்தில் மாலைகள், ரோஜா மலர்கள் கலந்து கட்டி தொங்கிக் கொண்டிருந்தது. தேனீக்கள் பறந்து பறந்து ரோஜாக்களை முட்டிக் கொண்டிருந்தன. அவைகளின் முதுகில் மஞ்சள் நிற துகள்கள்.

பூக்கடைக்காரரின் கைகள் இயந்திர வேகத்துடன், ஒழுங்குடன் மலர்களை கட்டிக் கொண்டிருக்க, சுவாரஸ்யமாக அருகில் பேசிக் கொண்டிருந்தார். பின்னணியில் புத்தம் புது காலை..., பொன்னிற வேளை.., பண்பலையில் பாடல் தேர்வு செய்பவர்கள் ரசனையுள்ளவர்கள் தான். எண்ணம் மெல்லிய புன்னகையை வர வைக்க, பதட்டம் அடங்கத் தொடங்கியது. பேருந்து ரவுண்டானாவை வளைந்து கடந்து, வந்தது.

பொறுமையாக வந்து சேர்ந்த நாட்களில் இத்தனை நுட்பமாக எதையும் கவனிக்கவில்லை. அதை எழுதவும் தோன்றவில்லை. இத்தனை பதட்டத்தில் வந்த போதும், ஒவ்வொன்றும் கவனிக்கப்பட வேண்டிய காரணம் என்ன.? அதே பாலம், நிறுத்தம், பூக்கடை, மாலைகள், பண்பலை பாடல்கள் எல்லாமும், எதுவும் மாறாமல், தினமும் அங்கேயே தான் உள்ளன. இன்று மட்டும்
மனதில் அப்படியே பதிந்துவிட காரணம்? பதட்டம் என்னும் பெரிய குன்றை, நுண்ணிய கவனிப்புகள் வழி, சிறு சிறு துகள்களாக்கிச் செரிக்க முயல்கிறதா மனம்.?

தினமும் பேருந்தில் கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றும். ஆனால் கைகள் ஓடாமல் வெறுமே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இன்று தானாகவே எழுதிச் செல்கிறது கைகள். அதைப் பிடித்துக் கொண்டு மிதந்துச் செல்கிறது மனது. மழை இன்னும் தூறிக் கொண்டே இருக்கிறது.



Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.