கிருஷ்ணப் பருந்தும் மிளிர் கல்லும்.



ஒரு மாதத்திற்கு மேல் முயன்றும் சில பக்கங்களுக்கு மேல் வாசிப்பு நகராமல் இருந்த இரண்டு நாவல்களையும் இந்த வாரம் இரண்டே நாட்களில் வாசித்து நிறைவு செய்ய முடிந்தது. எழுத்தும் வாசிப்பும் இப்படி தான் ஆகிறது. நாம் முயற்சி எடுக்கும்போது நகராமல் அடம் பிடிக்க, அதுவாக ஓடும்போது நம்மை இழுத்துக் கொண்டு தலை தெறிக்க ஓடுகிறது. 

இரா.முருகவேள் எழுதிய மிளிர் கல் இரண்டு அத்தியாயங்களோடு ஒரு மாதமாக காத்திருப்புப் பட்டியலில் கிடந்தது.  ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்தை வாசிக்க தொடங்கினேன். சாலைக் கடையின் பின்பக்கம் உள்ள தோப்பு விளையும், அந்தத் தோப்பின் தென்னை மரத்தில் வந்தமரும் கிருஷ்ணப் பருந்தை போலவே தனிமையில் வாழும் குருசாமியும் மனதை மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர். சிறு பிராயத்தில் தோப்பு விளைக்கு குருசாமியிடம் வரும் வேலப்பன் அவருடன் வளர்ந்து  பெரிதாகி அவரை வெறுக்கத் தொடங்குவதென  வேலப்பனைச் சுற்றி கதை நகர்கிறது. குருசாமியின் எண்ணவோட்டங்கள் வழி அவர் மனதின் மாற்றங்கள், ராணியின் பால் அவருக்கு ஏற்படும் ஈர்ப்பு என கதை வேறொரு பாதையில் பயணிக்கத் தொடங்கும்போது இரண்டாம் பகுதி தொடங்குகிறது. அதோடு நிறுத்தினேன். அடர்த்தியான மொழியும், மலையாளங்கலந்த தமிழும் சிறிது ஆசுவாசத்தைக் கோரவே, வாசித்த பக்கங்களை மாற்றாமல் புத்தகத்தைக் கவிழ்த்து வைத்தேன்.

கண்ணகியும் கோவலனும் மதுரைக்குச் சென்ற வழித்தடத்தில் பயணிக்க ஆர்வம் கொள்ளும் முல்லை, அவளுக்குத் துணையென நவீனும் பூம்புகார் செல்வதற்கு முன் வரை வாசித்துவிட்டு நிறுத்தியிருந்த புத்தகத்தை திரும்ப எடுத்தேன்.  விறுவிறுப்பாக நகர்ந்தது கதை. பூம்புகாரிலிருந்து காவிரிக் கரை வழியே திருவையாறு ஸ்ரீரங்கம் உறையூர் மேலூர் வழியாக கதை பயணிக்கிறது அதோடு நாமும். கண்ணகி, கோவலன் கொங்கு பகுதியில் கிடைக்கும் மாணிக்கக் கற்கள் அதோடு தொடர்புடைய அரசியல் என்று பேசி கதை குமுளியில் மலையேறி கண்ணகி கோவிலைச் சுற்றிக் காட்டுகிறது. ஸ்ரீகுமார் என்ற ஆய்வாளர், நவீன், முல்லை மூவரும் பேசி கதையை நகர்த்துகின்றனர். இவர்களுக்கிடையே நடைபெறும் உரையாடல் பகுதிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. இறுதியில் கொடுங்களூர் கண்ணகி திருவிழாவில் கதை முடிவை அடைகிறது. முதல் சில அத்தியாயங்களை கடந்துவிட்டால் வாசிக்க சுவாரஸ்யமாக உள்ளது. 

இக்கதையை முடிப்பதற்காக சாமியப்பா எனக்காக காத்திருந்தார். ஆம். மிளிர் கல் வாசிக்கும்போது அவர் நினைவு வந்துகொண்டே இருந்ததை தவிர்க்க இயலவில்லை. சாலை கடையில் கலவரம் நடக்கிறது. சாமியப்பாவை செங்கல் ஒன்று தாக்குகிறது. அது வேலப்பன் அவர் மேல் எறிந்தது. ராணி மேல் அவருக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருப்பதை அவன் முன்னரே அறிந்தானா..? கலவரத்தில் வேலப்பன் சிறைக்கு சென்றுவிட ராணியும் சாமியப்பாவும் தனிமையில் சிக்குகிறார்கள். இறுதியில் என்ன நடந்தது என்பதை வாசித்து உணர்ந்து கொள்ளுங்கள். 


Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.