புதுமைப்பித்தன் பிறந்த தினம்.



புதுமைப்பித்தன் என்ற பெயர் அறிமுகமானது கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கையில்.  ராஜேஷ்குமார் சலிக்கத் தொடங்கி, தள்ளுவண்டி பழைய புத்தகக் கடைகளில் சுபா, இந்திரா சௌந்தர்ராஜன் என்று தேடத் தொடங்கியிருந்த காலத்தில், கல்லூரி வகுப்பறையில் ஒரு நாள் அவன் அந்த இரண்டு பெயர்களைக் கூறினான். முதன்முறை கேள்விப்பட்டேன் புதுமைப்பித்தன், அசோகமித்திரன் என்ற பெயர்களை.

பெயரில் இருந்த கவர்ச்சியே கல்லூரி நூலகத்தில் புதுமைப்பித்தன் நூல்களைத் தேட வைத்தது. நீண்ட நேரம் தேடிய பின் தடிமனானப் புத்தகம் ஒன்று கைகளில் கிடைத்தது. கருஞ்சிவப்பு நிற அட்டையில் தீச்சுடர் ஒன்று எரிய  புதுமைப்பித்தன் என்ற பெயரைப் பார்த்தவுடனேயே எடுத்துக் கொண்டேன். அதன் பிறகே புத்தகத்தின் பெயரைப் பார்த்தேன். அன்னை இட்ட தீ. தொகுப்பு நூலான அதில் புதுமைப்பித்தன் எழுதிய கட்டுரைகள், மனைவிக்கு எழுதிய கடிதங்கள், ரசமட்டம் என்ற பெயரில் கல்கியுடன் நடைபெற்ற விவாதங்கள் என அந்த புத்தகம் வாசிக்க அத்தனை ஆர்வமாக, இன்பமாக இருந்தது. முதன்முதலில் வாசித்த இலக்கிய நூல் அது தான். அங்கிருந்து புதிய பாதை ஒன்று திறந்தது.

மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் வாடகை நூல் நிலையத்தில் அந்த புத்தகத்தை பார்த்தேன். கையில் எடுத்துப் பார்த்த போது, அன்று வந்த அதே உணர்வு நிலையும், மகிழ்ச்சியும் பெருகி வந்தது. அன்றே இந்நூலுடன் ஏற்பட்ட பந்தத்தை எழுத நினைத்திருந்தேன். புதுமைப்பித்தன்  பிறந்தநாளில் எழுதுவதில் மகிழ்வே. 

என்னோடு தான் அவனும் பழைய புத்தகக் கடைகளுக்கு அலைந்து கொண்டிருந்தான். அவனுக்கு மட்டும் அந்தப் பெயர்கள் எங்கிருந்து அறிமுகமாகியிருக்கும் என்பது இன்று வரை எனக்கு ஆச்சர்யம் தான்.


Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.