17. தினமும் தோன்றுவதில்லை வானவில்.





இலைப் பறவை.


இலைகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. பறவைகள் வருவது குறைந்து விட்டது. மரங்கள் தனிமையை உணரும் கோடை. நிழலின் பரப்புக் குறைய மரத்தினடியில் ஊறும் எறும்புகள், பூச்சிகளை காணவில்லை. ஈரம் காய்ந்து நகரும் புழுக்களை விரட்டிவிட்டது. அணில்களின் கீச்சொலி, வாலை அடிக்கும் துள்ளல்கள் இல்லை.

அனல் காற்று வீசுகையில் இலைகள் தரையிலிருந்து எழும்பி சிறகை விரிக்கின்றன. ஒவ்வொரு மரத்திலிருந்தும் பழுப்பு நிற, சிவப்பு நிற, மஞ்சள் நிற இலைகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. நீண்ட நாள் தங்கியதால் அலுப்படைந்தது போல இலைகள் எழுந்து பறந்து செல்கின்றன மரத்திலிருந்து. தரையில் காய்ந்த இலைகள் மரத்தை நோக்கி தவம் புரிகின்றன.

ஒரே இடத்தில் மூன்று மணி நேரங்கள் எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்து, இலைகளை உதிர்க்கும் பருவத்தில் இருக்கும் மரத்தை கம்பிகள் போட்ட பெரிய சன்னல் வழியே பார்த்துக் கொண்டே இருக்கும் வாய்ப்பு, மனதில் பல திறப்புகளைத் தருகிறது.

அந்த மரத்தை நான் உற்று நோக்குவது அதற்கு தெரிகிறதா?  என்னை அதுவும் பார்த்துக் கொண்டிருக்கிறதா? அனல் பறக்கும் பகல் பொழுதில், கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உதிர்த்துக் கொண்டிருக்கும் மரம், அதை விடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதன். 

நேரம் செல்லச் செல்ல எங்கிருந்தோ சில மேகங்கள் சூழ்கின்றன. வெப்பம் தணிந்தது போலத் தெரிகின்றது. வெயில் மறைந்தாலும் மங்கிய வெளிச்சம் சுற்றிலும் பரவி நிற்கிறது. மேகத்திலிருந்து சிறிது குளுமை மரங்களுக்கு பாய்கிறது. மரங்கள் ஓய்வெடுத்துக் கொள்வது போல சற்றே தலையசைக்க, மரத்தடியில் குளுமையான வெளிச்சத்திற்கு எங்கிருந்தோ இரண்டு மைனாக்கள், நான்கு தவிட்டுக் குருவிகள் வந்திறங்கின. மைனாக்கள் சத்தமிட்டு காய்ந்த இலைகளில் எதையோ தேட, மஞ்சள் மூக்கு தவிட்டுக் குருவிகள் புங்கை மரத்தின் தரையொட்டிய தண்டுப் பகுதியில் பூச்சிகளை வேட்டையாடின. ஆழ்ந்த அமைதியின் மத்தியில் பறவைகளின் ஒலி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. வானத்தில் மேகம் மெல்ல கலையத் தொடங்கியது. இலைப் பறவைகள் மீண்டும் பறக்கத் துவங்கின.

Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.