16. தினமும் தோன்றுவதில்லை வானவில்.
கோடையின் வருகை.
சட்டென்று பால் பொங்குவதைப் போல கோடை காலம் சூழ்ந்து விட்டது. பனியில் மனம் மயங்கிக் கிடக்கும்போதே, கோடைப் பாம்பு எவ்வுயிரும் அறியாமல் பின் பனிக்காலத்தைக் கவ்வி விழுங்கிக் கொண்டது. இவ்வருடம் கோடை விரைந்து வந்துவிட்டது என்று பேருந்தில் பேசிக் கொண்டார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த வார்த்தைகள் காதில் விழுந்து கொண்டுதானிருக்கின்றன. பச்சை பொங்கிய வயல்களில் பழுப்பு நிறமும், தங்க மஞ்சள் நிறமும் திடீரென்று வானத்திலிருந்து கொட்டி விட்டது போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெயில் சிதறிக் கிடக்கின்றது. வரப்புகளில் ஆங்காங்கே சில புற்களின் தலை பனிக்காலத்தில் எழுந்தப் பச்சைக் கனவை இன்னும் சூடி நிற்கின்றன. பனிக்காலத்தின் வெண்ணிற பறவைகளை வெயில் விரட்டி விட்டது. கரிச்சான் குருவிகள் இன்னும் அறுவடை செய்யப்படாத வயல்களில் தென்படுகின்றன. ஒரு பழுப்பு நிறக் குருவி இவ்வருடம் விளைச்சல் எப்படியென்று நெற்கதிர்களை ஆராய்ச்சி செய்கின்றது. முற்றிய கதிர்கள் வெயிலின் பிள்ளைகள். எல்லா உயிர்களுக்கும் வெயில் வழங்கும் பரிசு. ஆகாயத்தை நோக்கி வெயிலில் திறந்து கிடக்கிறது அறுவடை முடிந்த வெட்ட வெளி ஒன்று. இயந்திரம் ஓடிய தடங்கள் பரவிக் கிடந்தது.
ஏரியில் நான்கு கருவேல மரங்களும் பச்சையாக திருவிழா முடிந்த பின் காலியாய்க் கிடக்கும் கோவிலைப் போல தனிமையில் நிற்கின்றன. மஞ்சள் பூக்கள் உதிர்ந்து பிஞ்சுகள் முற்றிக் கொண்டிருக்கின்றன. கரையில் கோரைப் புற்கள் காய்ந்து கோடையின் வருகையை மீன்களுக்கு அறிவித்தது. நீர் வற்றி ஓர் ஓரத்தில் கிடக்கின்றது தண்ணீர். அதில் சில கொக்குகளும், ஒரு மனிதனும் மீன் பிடிக்கும் முயற்சியில். இந்த ஏரியின் கொக்குகள் எங்கே சென்றன...?
எவ்வளவு கோடையிலும் அதிகாலைப் பேருந்துப் பயணத்தை சில்லென்று அழகாக்குகின்றது சன்னலைத் திறந்ததும் முகத்தைத் தழுவும் காற்று. வழக்கம் போல தவிட்டுக் குருவிகளும், மைனாக்களும் சாலை ஓரமாய் மண்ணில் நடந்து, தாவிக் குதித்து, தங்களுக்கிடையே சத்தமிட்டு உரையாடி இரை தேடிக் கொண்டே வெயிலை வரவேற்கின்றன.

Comments
Post a Comment