8. தினமும் தோன்றுவதில்லை வானவில்.
கடலில் ஒரு துளி.
கடலில் ஒரு துளியை சேர்ப்பதனால் அதன் அளவில் என்ன மாற்றம் நிகழப் போகிறது?
எதற்காக நான் எழுத வேண்டும். ஆயிரக் கணக்கானோர் எழுதி எழுதி மாய்ந்து கொண்டிருக்கும், தமிழில் நான் புதிதாய் என்ன எழுதி விடப் போகிறேன்.
உள்ளுக்குள் ஒரு முணுமுணுப்பு கேட்டுக் கொண்டே இருக்கிறது. எழுது எழுது என்று. அதை எதிர்த்து போராட முடியாமல் தோற்கும் போதெல்லாம் எதையாவது எழுதி அந்தக் குரலை கொஞ்சம் நிறுத்தி வைக்கிறேன். சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டு மீண்டும் அது பெருங்குரலெடுத்து என் மேல் அதன் ஆயுதத்தை வீசுகிறது.
காட்சிகளை காண்கையில், சில மனிதர்களை சந்திக்கையில், எவரையும் எதையும் பற்றி யோசிக்காமல் இருக்கையில், எப்போதும் அந்த குரல் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது. பயணங்களில் ஓயாமல் பேசுகிறது. ஒரு நூலையும் வாசிக்க விடுவதில்லை. இதெல்லாம் ஒரு நூலா? இதை விட நீ சிறப்பாய் எழுதுவாயே.., காதுகள் நாவலில் கேட்பது போல ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
காலம் ஒவ்வொரு மனிதனாய் இந்த பூமியின் வெளிக்குள் வீசிக் கொண்டே இருக்கிறது. அனுபவ வெளியில் நீந்திக் கொண்டே இருக்கிறோம். புதிய அனுபவங்கள் பிறந்து கொண்டேயிருக்கின்றன.
எல்லாமும் எழுதப்பட்டு விட்டது. இன்னமும் எதுவும் எழுதப்படவில்லை என்று எங்கேயோ வாசித்தது நினைவில் வருகிறது. கடலில் ஒரு துளியைச் சேர்ப்பதால் கடலுக்கு எதுவுமில்லை. வைத்துக் கொள்வதும் விசிறி வெளியே அடிப்பதும் கடலின் பாடு. கலப்பதால் துளிக்கொரு ஆன்ம நிம்மதி கிடைக்கிறது.

Comments
Post a Comment