6. தினமும் தோன்றுவதில்லை வானவில்.
கதைகள் சிதறிக் கிடக்கும் நிலம்.
காலையில் வீட்டின் அருகே வண்டியை நிறுத்தி ஸ்டாண்டு போடும்போது, மண் தரையில் மூக்கிரட்டை செடிகளுக்கிடையே கசங்கி மடித்தக் காகிதம் ஒன்று கீழே கிடந்தது. அதில் நீல மையால் எழுதப்பட்ட எழுத்துகள். உற்றுப் பார்த்தபோது என் பேச்சு, என்ன பிரச்சனை, அப்பா என்ற சொற்கள் கண்ணில்படவும் காதலர்கள் ரகசிய செய்தி பரிமாற்றம் எதுவும் இருக்குமோ? இந்த காலத்திலுமா? என்ற எண்ணத்தோடு காகிதத்தை எடுத்தேன். ஆர்வத்தோடு பிரித்தபோது எழுத்துப் பிழைகளோடு, வரிசை எண்கள் இடப்பட்டு கேள்விகள் எழுதப்பட்டிருந்தது. மேலே சற்று மடங்கியிருந்த பகுதியை நீவி விட்டபோது பிள்ளையார் சுழியுடன் அந்தக் கடிதம் தொடங்கப்பட்டிருந்தது.
1.வேலைக்கு போகனும்.
2.என் பையனுக்கு என்ன பிரச்சனை? எப்போது தீரும்.
3.மளிகை கடை வேலை
4.என் பேச்சு கேட்ட வேண்டும்
5.உடல் சோர்வு உள்ளது
6.அப்பா வீடு விற்று பனம் கிடைக்குமா
கையிறு மந்திரித்து கொடுக்கவும்
குணப்படுத்து கொடுக்கவும்
மலேசியா.
இதை வாசித்தபோது கையகலமே இருந்த காகிதத்தில் எழுதியவரின் தற்போதைய வாழ்க்கை நிலையை, அடையும் துன்பத்தை விளக்கி அதற்கான தீர்வையும் கோரியது தெரிந்தது. ஓரளவு எழுத்தறிவு பெற்ற ஒருவர். பெண்ணாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அம்மாக்கள் தான், மகன் தன் பேச்சைக் கேட்கவில்லை, கூறுவதை செய்வதில்லை என்று அதிகம் கவலை கொள்பவர்கள். தந்தைகள் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வார்கள் என்று தோன்றவில்லை. அதுவும் வேண்டுதல் மனு எழுதும் அளவுக்கு போவதற்கு சாத்தியக் கூறுகள் குறைவே. தந்தைகள் உலகம் என்பது ஆணின் உலகம் தான். அது எப்போதும் தனியானது.
இந்த காகிதத்தில் உள்ளதை விரித்து எழுதினால் ஒரு நாவல் உருப்பெற்று வரலாம் என்று தோன்றுகிறது. மூன்று தலைமுறைகளின் பிரச்சனைகள் இந்த வரிகளில். வேலையில்லாத, அம்மாவின் பேச்சை கேட்காத மகனின் இருப்பு, உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தி, அப்பாவின் வீடு விற்று வரும் பணத்தில் தன் வறுமை தீருமா என்று எதிர்பார்க்கும் மகள் என்று தலைமுறைகளின் வாழ்க்கைப் படிமங்கள் இதில் வருகின்றன. இவை அனைத்திலும் பெண்ணின் குடும்ப வாழ்வில் தற்போதைய நிலை மாற கடவுளிடம் தேவைப்படும் உதவிகள் குறித்த ஏக்கம் மறைந்து நிற்கிறது.
நிலத்தில் உள்ள மணல் துகள்களை விட அதிகமாக கதைகள் எங்கு நோக்கினும் சிதறிக் கிடப்பது தெரிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு துன்பம். துன்பக்கதைகளே உலகில் மிகுதியாக கிடக்கின்றது. மனித வாழ்க்கையில் துன்பமே நிறைந்து வழிகிறது.நம் மூளையே ஒரு துன்பம் ஜனிக்கும் கருவறை தான். அது உறங்கிப் போகும் சில நொடிகள் தான் நமக்கு இன்பமாய் உள்ளது. இறப்பு தான் எல்லாத் துன்பத்திற்கும் விடுதலை என எவரோ கூறியது சரிதான்.
இறுதியில் மலேசியா. அது அவள் பெயராக இருக்குமா? இப்படி ஒரு பெயர் வைப்பார்களா? அதுவும் ஒரு பெண்ணின் பெயர்? லே சி இரண்டும் சுழித்து எழுதப்பட்டு டி இருந்ததால் தெளிவாகத் தெரியவில்லை. ரி யாக இருக்குமா? மலேரியா? மலேசியா? தெளிவுறத் தெரியவில்லை.
அந்த காகிதத்தை திருப்பிப் பார்த்த போது மருந்துக் கடையில், மாத்திரைகள் வாங்கப்பட்ட ரசீதின் முகம் தெரிந்தது. நான்கு வகையான மாத்திரைகள் வாங்கப்பட்டிருக்க, மாத்திரைகள் பயனற்றுப் போன காலத்திலிருந்து எழுதி வெளியே வீசப்பட்ட காகிதம் அது.
கயிறு மந்திரித்து கொடுத்தால் தன் சுமைகள் எல்லாம் தீருமென எண்ணும் மனதிற்காக, முகமறியா அவளுக்காக வேண்டிக் கொள்ளத் தோன்றியது.
வாசித்த பின் கரங்களில் காகிதம் பாறையைப் போல கனத்தது. சுமக்க முடியவில்லை. வீசி எறிந்த போது இரும்பு குண்டைப் போல என் காலடியிலேயே விழுந்தது. குனிந்தேன். கோடிக்கணக்கில் காகிதங்கள் என்னைச் சுற்றிக் கிடந்தன.

Comments
Post a Comment