15. தினமும் தோன்றுவதில்லை வானவில்.




பின் பனிக்காலம்.


ஊரெங்கும் மூடு பனி சூழ்ந்திருந்தது. காலைத் துயில் நீங்கியச் சூரியன் ஆயிரம் கைகளையும் இழந்த கார்த்த வீரியன் துறவாடை பூண்டது போல வண்ணம் பூசி அமைதியாய் வானத்தில் கிடந்தது. வண்டியை வேகமாக செலுத்தியபோது குளிர் இன்னும் அதிகமாகத் தொடங்கியது. குளிரில் கைகளில் ரோமங்கள் சிலிர்த்துக் கொண்டன. தலைக் கவசத்தின் முன் கண்ணாடியில் கீழே சரியாக மூடாமலிருந்த சிறிய பிளவின் வழியே வந்த சில்லென்றக் காற்று முகத்தில் தன் ஈரக் கைகளால் தடவ, கைகள் வேகமாக இயங்கிச் சரியாக மூடியது. கால்களில் குளிர், நுண் அம்புகளென பறந்து வந்து தைத்து பாதங்களில் விறைப்பு ஒரு கனத்தப் போர்வையைப் போல மூடத் தொடங்கியது. இடது ஓரத்தில் காவிரி கீழே அகண்ட வெண்மணல் வெளியில் மூன்று பிரிவுகளாக சிறுத்துக் கிடந்தது. கடுங்குளிரில் நகராமல் கிடக்கிறது போல. காதலியை இறுக்கி அணைத்துக் கொண்டவன் போல அதன் மேலேங்கும் வெண்புகை வீழ்ந்து கிடந்தது. மணற் திட்டுகளில் வழக்கமாய் காணும் அந்த ஒற்றை நாரையை, பறவைகளைக் காணவில்லை. பதிலாய் நாணல்களில் வெள்ளைப் பூக்கள் கொக்குகள் போல ஆற்றை அலங்கரித்து கொண்டிருந்தன. மெல்லத் திரும்பி வானத்தைப் பார்த்தபோது சூரியன் மீண்டும் மெது மெதுவாய்க் கீழிறங்கிக் கொண்டிருந்தது கண்டு ஒரு கணம் மனம் துணுக்குற, குளிருக்குப் பயந்து கீழிறங்கிக் கொள்கிறதா? இல்லை பொய்த் தோற்றமா? இது மாலை வேளையென மனம் மயங்கி விட்டதா? மாயா விநோத லோகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி விட்டேனா? இல்லை நிஜமாகவே கதிரவன் சாய்கிறதா? சளி பிடித்து அடைத்துக் கொண்ட நாசி வேலை செய்ய மறுக்க, வாய் வழியே விட்ட பெருமூச்சில் தலைக் கவசத்திற்குள் புகை சூழ்ந்து மூடிக் கொண்டது. கவசம் முழுக்க வெள்ளை உருண்டை போலத் தெரிந்தது. பனியில் காணவில்லை சூரியன். மேம்பாலத்தில் இறங்கிக் கொண்டிருந்தது வண்டி. சமதளத்தில் இறங்கிய போது விழிகளுக்கு நேரே புன்னகைத்தபடி நின்றிருந்தது கதிரவன்.

Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.