13. தினமும் தோன்றுவதில்லை வானவில்.
அதிகாலை களையிழந்து கொண்டிருக்கும் இருட்டு. நதியில் சிதறிக் கிடக்கும் மணல் திட்டுகளுக்கு நடுவே நீர் கறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. நீரை ஒட்டி இருந்த சிறிய மணல் திட்டில் ஒரு பறவை நிழலுருவாய் நகர்கிறது. நீளமான கால்களை எடுத்து வைத்து மெல்ல நடந்து கொண்டிருக்கிறது. சற்றே குனிந்த தலை.
வானில் மேகம் ஒன்று விடிவதற்கு முன் தப்பி வந்த வெளிச்சத் துண்டைப் பிடித்து வைத்துக் கொண்டுத் தனியே ஒளிர்கிறது. பறவையின் பின்னே இருளில் நதிநீரில் அந்த மேகம், கலங்கிய நிலவாய் பொய்த் தோற்றம் காட்ட, அதன் ஒளியில் கறுப்புப் பறவை கொக்காய் மெல்ல உருமாறுகிறது. வானம் இருளிலிருந்து சாம்பல் நிறத்தைத் தொடத் துவங்கும் போது நதியின் கரையில் பட்டைகளின்றி காய்ந்த, கரிய மரம் ஒன்று இருளின் துணையாய் வெளியே வந்தது. இலைகள் இல்லையெனினும் மரம்.
நீர் இல்லையெனினும் நதி. உயிர் கொடுக்க விரும்பி அம்மரத்தைத் தழுவிக் கொண்டு நிற்கிறது நதி. அணைப்பின் சுகத்தில் ஆழ்ந்து கிடக்கிறது மரம்.
பெயர்த்து எடுக்க முடியாமல் விழுந்து கிடக்கிறது மனது. நாள் தவறாமல் அதிகாலையில் மணல் திட்டிற்கு வந்து செல்கிறது அப்பறவை.

Comments
Post a Comment