12. தினமும் தோன்றுவதில்லை வானவில்.






பனியில் கரையும் வெயில்.


பனிக்காலத்தில் உதயமாகும் சூரியன்  சிரத்தையுடன் அலங்கரித்து கொண்ட அழகியாய், கடலாய் விரிந்த பச்சை வயலுக்கு மேலே இதமாகத் தெரிந்தது. கலைந்து கொண்டிருந்த புகையை வயலின் மேலே விரித்து உறங்கியவர் யார் என்று தெரியவில்லை. படுக்கையை சுருட்டி வைக்கவேண்டும் என்ற நாகரீகம் இல்லாதவர்  போல. அன்னையைப் போல அதை எடுக்க முயன்று தடுமாறிக் கொண்டிருந்தது.

கோடையின் சூரியன் எரிச்சலுடன் மேலேறி எல்லோருக்கும் அதன் உணர்வை கடத்துகிறது தாவரங்களுக்கும் சேர்த்து. பாதி உறக்கத்தில் கலைந்து எழுந்ததைப் போல சினத்துடன் பணிக்குக் கிளம்புகிறது. 

பொன்னிற மலர்களை சூடிக் கொள்ளும் பனிக்காலம் எல்லா உயிர்களிலும் ஓர் அழகைக் கொண்டு வந்துச் சேர்க்கிறது. சூரியனுக்கு தினமும் தனி அழகைப் பூசி விடுகிறது. கொக்குகள் ஊடாடும் நெல் வயல்களைத் தாண்டி கரும்புத் தோட்டங்களின் முடிவில் ஏரியின் கரையில் இருந்த பனை மரங்களுக்கு இடையே தெரிந்த இந்தக் கதிரவன் அங்கிருந்து சில்லென்ற காற்றை ஊதுகிறது.

பனி படர்ந்த இந்தக் காலைப் பொழுதில் குளிருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த சோம்பல் எவ்வளவு சுகமாய் இருக்கிறது. போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கத் தோன்றும் இந்தக் காலை வேளையில் பேருந்துப் பயணம். மனதுக்கும் ஒரு போர்வை வேண்டும் எல்லாவற்றையும் மறைத்துக் கொள்ள. 


Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.