4. தினமும் தோன்றுவதில்லை வானவில்.

 


உடையார் பாளையம் போகுமா? பேருந்தில் ஏறி என்னருகில் வந்த பின் கேட்டவன், போகாது என்றால் ஒடும் பேருந்திலிருந்து இறங்கவா போகிறான்? உடன் அமர்வது போல எழுந்த அவன் உடல் மொழியைப் பார்த்து, பின்னால் திரும்பிப் பார்த்தேன். குறிப்பை அறிந்து கொள்ளாதவன் நகர்வதாய் தெரியவில்லை. பையை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன். கனத்தது. இரண்டு பேர் அமரும் இருக்கையில் தனியாக அமர்ந்து கம்பா நதியில் அமைதியாக நீந்திக் கொண்டிருந்தவனை, அவன் வந்து அமர்ந்தது குளத்தில் கல்லெறிந்தது போல அலையடிக்கத் தொடங்கிய மனது, புத்தகத்திலிருந்து வெளியே வந்து விழுந்தது.

காலை நேரத்தில் இந்த பேருந்தில் பயணம் செய்வதை அவ்வாவு விரும்புவேன். கூட்டம் இல்லாமல் அமைதியாய் இருக்கும். வாசிக்க மனம் அழகாக ஒன்றி வரும். வாசிக்காமல் இருந்த புத்தகங்கள் அருமையான துணையாகின. முழுதாக ஒரு மணி நேரம் தொடர்ந்து வாசிப்பேன். அசுர கணம் நாவலை எடுத்துக்கொண்டு அதன் இறுதிக்கட்டம் வந்த போது இறங்குமிடம் வந்துவிட்டது. இறங்கி மீதமிருந்த நான்கு பக்கங்களை பேருந்து நிறுத்தத்தில் நின்றவாறே முடித்தேன். இரண்டு பக்கமும் பச்சை வயல்களுக்கு நடுவே செல்லும் இந்த பயணத்தை அதுவும் பெரும்பான்மை நாட்களில் நான் மட்டும் அமர்ந்து செல்லும் இந்த இருக்கையை, சன்னலை அத்தனை விரும்புவேன்.  மாலை நேரத்தில் வேறு பேருந்து, அதில் எப்போதும் நின்ற நிலை பயணம்தான். 

பேருந்தில் சில நேரங்களில் எழுதும் மனது அமையும். இந்த நூலில் பெரும்பாலான கட்டுரைகள் அந்த பேருந்தில் எழுதியது தான். சில கவிதைகள், சிறுகதையை முயற்சித்தல் என எழுதும் கைகளுக்கும் மனதிற்கும் இணைப்புச் சங்கிலியாய் இந்த காலை நேரப் பயணம் உதவும். சில நாட்களில் தினமும் எழுதிப் பதிவு செய்து வைத்துக்கொண்டதும் உண்டு. வாசிக்கும், எழுதும் நேரங்களில் பேருந்தில் நான் மட்டுமே என உணர்வேன். வேறு எவரும் இல்லாத, எந்த புற ஒலிகளும்  இல்லாத அமைதியான சூழல் நிலவுவது போல தோன்றும். அது போன்ற ஒரு சூழலில்தான் இவன் வந்தமர்ந்தான்.

பேருந்தில் பாதி காலியாக இருக்கிறது. சில இருக்கைகளில் ஆட்களே இல்லை. இவன் என்னடாவென்றால்...! மனதில் கோபம் பெருகியது. தனிமை சலனப்படுத்தப்பட்டதன் கோபம். புத்தகத்தை பைக்குள் வைத்தேன். இனி வாசிப்பில் மனம் ஒன்றாது. வெளியே வேடிக்கைப் பார்க்க அனுப்பினேன். பள்ளத்தில் எறிந்த காகிதத்தை காற்று மேலே கொண்டு வருவது போல திரும்ப வந்தது. அவன் மீது ஏற்பட்ட கோபத்தை மீட்டுக் கொண்டது. அவனைப் அவ்வப்போது பார்த்தேன். கண்ணாடி அணிந்தவன். திருத்தமாக உடையணிந்து கொண்டிருந்தான். வீடியோ பார்க்க ஆரம்பித்தான். 

'பின்னாடி எவ்வளோ சீட் காலியா இருக்கு? அங்க போக வேண்டியது தானே.. இங்க வந்து உட்கார்ந்து இம்சை பண்றான்.'

'மனுஷன் மட்டும் மோசம். நிறைய சீட் காலியா இருக்கப்ப அவ்வளோ சீக்கிரம் உட்காரமாட்டான். அந்த சீட் சவுகரியமாக இருக்கா இல்ல இந்த சீட்  ஓகேவா? உட்கார்ந்த பின் மீண்டும் அடுத்த சீட்டைத் தேடி நகர்ந்து போவான். அப்புறம் ஜன்னல் சீட்னு தடுமாறி கடைசியா உட்காருவான். பார்த்தாலே கடுப்பாய் வரும்.'

'ஆனா பஸ் கும்பலா ஒரே ஒரு சீட் மட்டும் காலியா இருக்கப்ப பாருங்க, அதுவும் ரெண்டு பேருக்கு நடுவுல இருந்தா கூட ஓடிப் போய் உட்கார்ந்துக்குறான்.'

இறங்கும்வரை கரும்புத் தோகைகளை எரித்த வயல் மண்ணைப் போல எண்ணங்கள் சூடாகவே இருந்தது. கருகிக் கொண்டே கிடந்தது.

என்ன பெரிய இலக்கியம்? இவ்வளோ படித்தும் என்னத்துக்கு  ஆனது? பேருந்தில் பக்கத்தில் அமர்ந்தவனை சகித்துக் கொள்ளக்கூடிய மனது வாய்க்கவில்லையே இன்னும்.


Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.