2.தினமும் தோன்றுவதில்லை வானவில்

 


பயணத்தை எழுதுதல்.

பணிக்காக பயணம் செய்வது, பயணத்தின் வழி அனுபவங்களைப் பெறப் பயணம் மேற்கொள்வது இரண்டுமே பயணங்கள் தான் என்ற போதிலும் இரண்டிலும் ஒரே அனுபவங்கள் கிட்டுவதில்லை. அரிதினும் அரிதான சமயங்களில் அப்படி வாய்ப்பதுண்டு.
பனி விலகிக் கொண்டிருந்த காலையில் பேருந்தில் சென்ற போது, சன்னல் வழி பார்த்தவைகள் எல்லாமும் சின்னச் சின்ன கவித்துவ வரிகளாக மனதில் பாய்ந்தது. தொடர்ச்சியாக காட்சிகள் துலங்கிக் கொண்டே வந்தன. புதியதோர் அனுபவம் கிடைத்தது போல இருந்தது. தினமும் பார்க்கும் வேகமாக நகரும் காட்சிச் சட்டகத்தில் அன்று காண்பவை எல்லாமும் வேறாக தெரிந்தது. இதை எழுதினால் என்ன என்று தோன்றியது.

பேருந்துப் பயணத்தில் நொடிக்கு நொடி காட்சி மாறிக் கொண்டே இருக்கிறது. அதை எப்படி நினைவில் நிறுத்தி எழுதுவது? வேகமாய் மாறும் காட்சியில் ஏதோ ஒரு பகுதி மட்டுமே வெளியிலிருந்து எழுந்து வந்து மனதில் விழுகிறது. அதுவும் வினாடிக்கு மிகவும் குறைவான கால இடைவெளியில் அந்த ஒளித் துணுக்கை எப்படி எழுத? எழுதுவதற்குள் அடுத்த காட்சி தொடங்கிவிடுகிறது.

வாய்ஸ் ரெக்கார்டிங்கில் ஒளியை ஒலியாக மாற்றிப் பதிவு செய்து பிறகு அதை சாவகாசமாக அமர்ந்து எழுத்தாக ஆக்கலாமா? பேருந்தில் இருப்போர் விநோதமாக நோக்கினாலும் பரவாயில்லை. ஒரு நாள் செய்து பார்த்து விடவேண்டும் சரியாக வருகிறதா என்று.

ஜெயங்கொண்டம் பேருந்தின் ஜன்னலோர இருக்கையும் அன்றொரு நாள் காட்சிகள் வரி வரியாக எழுந்து வந்து என்னில் பாய்ந்த அந்த மனநிலையும் வாய்க்க வேண்டும்.


Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.