1. தினமும் தோன்றுவதில்லை வானவில்-1
தினமும் இத்தனை வார்த்தைகள், பக்கங்கள் எழுதினால் எழுத்து மேம்படும், பழக்கமாகும் என்று ஒரு பக்கமும், உள்ளொளியின் வெளிச்சமே இலக்கிய எழுத்து. எப்போதும் எரிந்து கொண்டிருக்க அது மின் விளக்கல்ல என்று வாதிடும் மற்றொரு பக்கமுமாக பிரிந்து சமரிட்டுக் கொண்டிருக்கையில் மூன்றாவது பக்கத்தில் சிலர் உண்டு. தினமும் எழுத வேண்டும் என்ற பேராசையும், கைகள் நகராமல் தோன்றும் போது எழுதுவோம் இல்லையென்றால் தவநிலையில் இருப்போம் என்ற பக்கம். எனக்கு இந்த மூன்றாம் பக்கத்தில் இருப்பது சொகுசாக இருந்தாலும், எழுத வேண்டிய விஷயங்கள் மனதில் தேங்கிக் கிடப்பதன் குற்ற உணர்வு உறுத்திக் கொண்டே இருப்பது சிறிது வருத்தமாகத் தான் உள்ளது.
தினமும் எழுத வேண்டும் என்று ஆசை பெருக்கெடுத்து ஓடுகிறது தான். எழுத வேண்டிய கட்டுரைகளுக்கான விஷயங்களும், கதைகளாக எழுத வேண்டிய சம்பவங்களும் வரிசைக் கட்டி நிற்க, கைகள் மட்டும் அசையாமல் கிடக்கின்றது. அதை இயக்க வேண்டிய மூளையின் பகுதியோ தேமேவென்று தூங்குகிறது போலும். சிந்திக்கும் பகுதியும் அதை ஒருங்கிணைத்து சொற்களின் வழி ஒரு வடிவத்திற்கு கொண்டு வரும் பகுதிகளும் மூளையின் வெவ்வேறு மூலையில் திரும்பிக் கொண்டு நிற்கின்றது என்பது போலத் தான் தடுமாறுகிறது மனம் தினமும். மூளை விசித்திரம் நிறைந்தது என்று தன்னைப் பற்றியே எழுதிக் கொள்வதாக எழுதிக் கொண்டே போகிறது.
எந்த காட்சியையும், செயலையும் பார்க்கும் நொடிகளில் மனம் சிந்திக்கும் வேகத்திற்கு அனைத்தும் சொற்களாக மாறினால், மாற்றினால் ஒரு நாளைக்கு எத்தனை புத்தகங்கள் எழுதப்படும் என்பதை எண்ணுகையில் பிரமிப்பாக இருக்கிறது. அது போன்ற தொழில்நுட்பம் இன்னும் இங்கே புழக்கத்திற்கு வராதது உலகத்தின் காடுகளுக்கு நல்லது தான். மரங்கள் மிகவும் அவசியமானவை.
எழுத நினைப்பதை மட்டும் எழுதுவதே இல்லை. எதையும் நினைக்காத போது எதையாவது எழுதுகிறது தானாகவே. இப்போது எழுதிக் கொண்டிருக்கிறதே இது போல. அப்படி அவ்வப்போது மனதிலிருந்து எழுந்து வருவதை அப்படியே பதிவு செய்து வைத்தது தான் இந்த தொடர்.

Comments
Post a Comment