காரை

 



காரை. 

"எதனால் தாத்தாவுக்கு இந்த பெயர்?" என்று கேட்டேன்,
தந்தையும், தெரியவில்லை என்றார். சிறுவனாக இருந்த போது, இந்த சந்தேகம் வந்திருக்குமென்றால் தாத்தாவிடமே கேட்டிருக்கலாம். இந்த சந்தேகம் வந்த போது, அவர் இல்லை.

பெற்றோர் இட்ட பெயர், இடப்பட்டவருக்கே மறந்து போகும் அளவுக்கு, சில பட்டைப் பெயர்கள் பெருகி செழித்து வளர்ந்த காலம். ஒவ்வொருவருக்கும் குறைந்தது இரண்டு பெயர்களாவது இருந்த நாட்கள் அவை. காரை என்பதற்கு, பெயர்க்காரணம் என்னவாக இருக்கும் என்று பலவாறாக சிந்தித்துப் பார்த்துள்ளேன்.

'ஊரில் முதன் முதலில்
காரை வீடு கட்டியிருப்பாரா?'
அப்படி எந்த வீடும் இல்லை.  'வெற்றிலைப் போட்டு பற்களில் காரை படிந்தததாலா?' அந்த பழக்கமும் இல்லை. என் தந்தைக்கு இருப்பது போல பீடி குடிக்கும் பழக்கமும் கிடையாது. பற்களில் வேறுவகைக் காரையும் கிடையாது.  இது போல் யோசனைகள் பெருகி ஒடும். ஆனால் காரணம் கிடைக்காது.
ஊரில் பழுத்துத் தோல் சுருங்கிய பழங்கள் சிலரிடம் விசாரித்த போது, அவர்களுக்கும் தெரியவில்லை அல்லது அவர்கள் நினைவிலிருந்து காரணம் தப்பியிருக்கலாம்.

எப்படி முயன்றும்  விளக்கம் கிடைக்கவில்லை. ஆனால் இந்தத் தேடலில், தாத்தாவைப் பற்றிய  சுவையான கதை ஒன்று எனக்குக் கிட்டியது. அது அவரின் பட்டைப் பெயர் பற்றியதல்ல.

திருச்சி மாநகராட்சி,
பழமையான நகராட்சிகளில் ஒன்றாக இருந்தபோது, கிராமங்களில் மின்சாரம் நுழையத் தொடங்கியிருந்த காலக்கட்டத்தில் நடந்த கதை. உண்மைக் கதை என்றும் சொல்லலாம். காலத்தின் படிமங்களில், நினைவுகள், செயல்கள், சம்பவங்கள், உண்மைகள் அனைத்தும் அடுக்குகளாக ஒன்றின் மீது ஒன்றாக சேர்ந்து கொண்டே சென்று, நசுங்கி உருமாற்றம் பெற்றுக் கதைகளாகவே பெயரிடல் செய்யப்படுகின்றன. காலஞ்சென்ற  உண்மைகளும், பொய்களும் கதைகளாகவே நினைவு கூறப்படுகின்றன. ஒரு பழங்கால நினைவின் சுருக்கங்களிலிருந்து தன்னை நீவிக்கொண்டு எழுந்து வந்த கதை. உங்கள் ஊரிலும் இதே போன்ற கதை நிகழ்ந்திருக்கலாம். வாய்ப்புகள் உண்டு. எல்லா ஊரிலும் ஒரே மனிதர்கள் தானே. மனங்களும், காலமும் அதன் பரிமாணங்களும் தான் வேறுபடுகின்றன.

நகரின் மையப் பகுதியில் இருந்த நகராட்சிப் பூங்காவில், தாவரங்களுக்கு நீர் ஊற்றும் வேலை அதோடு மாலை வரை காவலும். கைரேகை வைத்து ஊதியம் வாங்கும் அரசுப்பணியில் இருந்தார் தாத்தா. சம்பளம் எவ்வளவு என்று எனக்கு நினைவில்லை. ஆனால் மிகக் குறைவாகவே பெற்றிருக்க வேண்டும் என்பது, அவர் ஓய்வு பெற்ற பின் வந்த தொகையைத் தெரிந்து கொண்ட போது புரிந்தது.

எட்டுப் பிள்ளைகளைப் பெற்றவர்,
சைக்கிள் ஓட்டப் பழகவில்லை. நறுங்கிய தேகமும், தோளில் துண்டும் நாலு முழ வேட்டியுமாக தினமும் நடந்தே தான் பூங்காவிற்கு சென்று வருவார். அவசரமில்லாத பொறுமையான நடை அவருடையது. நிதானமாக ஊரிலிருந்து கிளம்பி குடமுருட்டி வழியே கோணக்கரை சாலையில், சுடுகாட்டைக் கடந்து உறையூரைத் தாண்டி நடந்து பூங்காவிற்குள் செல்லும்போது, ஏழு கிலோமீட்டர்களோடு காலையில் சாப்பிட்ட பழைய சோறும் செரித்து விடும். நீருற்றும் பணி முடிந்ததும், வேப்பமர நிழலில் துண்டை விரித்துப் போட்டு குட்டித்தூக்கம் போடுவார்.

மதிய வேளைக்கு பூங்காவைச் சுற்றிய நகரப் பகுதிகளில், நடந்து செல்லும் தூரத்தில் உள்ள கல்யாண மண்டபங்களில் எப்படியாவது உணவு கிடைத்துவிடும். அவர் சாப்பிட்டுவிட்டு, மண்டபங்களில் சாப்பாடு மிஞ்சும் சமயங்களில் பிள்ளைகளுக்குக் கட்டுச்சோறு எடுத்து வருவார். துண்டை அகல விரித்து அதன் மேல் வாழை இலையை நடு நரம்பை விரல்களால் உடைத்து வைத்து சோற்றை இலையில் பரப்பி அதில் சாம்பார், ஓரமாக பொரியல் காய்களையும் ஒன்றாக உருட்டிக் கட்டி துண்டை முடிச்சிட்டுக் கொள்வார். மாலை வேளைகளில் அடிக்கடி அவர் துண்டு, சோற்றின் எடையுடன்,  நடக்கும் போது இடம் வலமென உருண்டு ஊசலாடிக் கொண்டே தோளில் பயணமாகும்.

அன்று சென்ற மண்டபத்தில் மதிய உணவுக்கு தாமதமானது. பெரிய வீட்டுக் கல்யாணம் போல.
கூட்டம் குறையாததால், பந்தி தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.  மாலை மிக நெருங்கிவிட்ட போது தான், துண்டில் உணவு வகைகள் கட்டப்பட்டு, மூட்டையுடன் கிளம்பினார்.

உறையூர் தாண்டி கோணக்கரை சாலையில் நுழையும்போதே இருட்டத் தொடங்கிவிட்டது. சுடுகாடு தாண்டி,  கரூர் சாலையில் குடமுருட்டி ஆற்றுப் பாலத்தை தொட்டபோது இருள். நன்றாகவே சூழ்ந்துவிட்டது. நகரம் முடிவுறும்  எல்லையான குடமுருட்டி ஆற்றுப் பாலத்தைத் தாண்டியதும், சாலைக்கும் இருட்டுக்கும் வேறுபாடின்மை தொடங்கும். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஊர். பாலத்தைக் கடந்து நடையில் வேகத்தைக் கூட்டியவர், திடுக்கிட்டு அதிர்ந்து நின்றார்.

இருளில், நிலவொளி பட்டு மின்னிக் கொண்டிருந்தன நாணயங்கள். சிறிதும் பெரிதுமான வட்டங்களாக நிறைய நிறைய நாணயங்கள். கைகளில் பொறுக்கி, அள்ள முடியாத அளவுக்கு. இருண்ட வானத்தை தரையில் விரித்து, அதில் விண்மீன்களை இறைத்தது போலக் கிடந்தன. சாலையிலிருந்து கிளம்பி, ஓரத்தில் சரளை மண்ணில், தொடர்ந்து அடர்த்தியாய் வளர்ந்து நின்ற வேலாங்கழி செடிகள் வரை பரவலாகக் கொட்டிக் கிடந்தது.

சரக்கு லாரி ஒன்று வேகமாக கடக்க, தன்னுணர்வு மீண்டவர் வேகமாக கிளம்பி ஓட்டமும், நடையுமாக வந்து சாலையை விட்டிறங்கி, மண் பாதைக்குள் நுழைந்து ஜல்லிக் கற்களில் தடுமாறி கரூர் ரயில்வே லைனைத் தாண்டி, ஊருக்குள் நுழைகையில் வேர்த்து இருட்டிலும் முகம் மினுமினுத்திருந்தது. ஊர் மன்றாடியில் பெரியத் தூண்களாக விழுதுகள் இறங்கியிருந்த ஆலமரத்தின் அடியில், வெற்று மார்பும், பீடியும் இடுப்பில் வேட்டியுமாக  அமர்ந்திருந்த ஆறேழு பேர் முன் நின்றது நடை.

"எலேய், எந்திரிங்கடா... அங்க பாலத்துக்கிட்ட, ஏகப்பட்ட காசுங்க.., கொட்டிக் கிடக்கு.. எல்லாம்.... எல்லாமும்..., வெள்ளிக்காசுங்கடா..! பொறுக்கிட்டு வரலாம்..  கோணிச் சாக்கு ரெண்டு எடுத்துட்டு வாங்க..!"  மூச்சு வாங்கியது.

அவர்களைச் சுற்றிப்
புழுங்கிக் கொண்டிருந்த இரவில், குளிர்ந்த ஒரு நெருப்புத்துண்டை வீசியது போல புத்துணர்ச்சி ஏற்பட்டது. அரை வட்டமாக விசிறிக் கொண்டிருந்த துண்டைத் தலைப்பாகையாக கட்டிக் கொண்டே வேகமாக எழுந்தார்கள். நொடிக்குள் சாக்குப் பையோடு ஒருவன் திரும்பி வந்தான். அவர்கள் ரயில் பாதையை தாண்டும் முன், தாத்தா வந்து இணைந்து கொண்டார். சோற்று மூட்டை வீட்டிற்குச் சென்றிருந்தது. தங்களுக்கான வெளிச்சத்தை நோக்கி இருட்டில் வேகமாக நடந்தனர்.

"அப்புறம் என்னாச்சு?"

"சாயந்தரம் கரூர் போற லாரி ஒண்ணு, பஸ் பின்னால மோதினதால கொட்டுனது, அத்தனையும்  கண்ணாடித் துண்டுங்க.., உன் தாத்தன் அவ்வளோ விவரம் பார்த்துக்க."

உப்பு, புளி, மிளகாய், மூட்டை அரிசிக்காக நிலத்தின் பகுதிகளை எழுதிக் கொடுத்த பஞ்சம் பெருகிய  காலத்தில்,
தாத்தாவின் கண்களுக்கு தெரிந்த அந்த வெள்ளி நாணயங்கள், இன்னும் அங்கே தான் கிடக்கின்றன.



Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.