ஒரு திருவரங்கத்துத் தேவதை.


 

குணங்கள் மனிதர்களிடையே பல்வேறு வண்ணங்களைப் பூசிக் கொண்டு விளையாடுகிறது. குணக்கேடும், குணநலனும் பின்னிப் பிணைந்த மனித வாழ்வில், நீரின்றி வறண்டு, பிளந்து கிடக்கும் நிலத்தின் ஓரத்தில், முளைத்து நிற்கும் சிறு செடியில், பூத்து நிற்கும் மலரென சில தூய மனிதர்களை, வாழ்க்கையின் மனித அவலங்களுக்கிடையே சந்திக்க நேரிடுகிறது. தினமும் அவர்களை சந்திக்காத போதும், அவர்களுடன் உரையாடல் இல்லாதபோதும், தொலைவில் விழும் அருவியின் ஈரம் நெஞ்சில் பாய்வது போல, நம்மில் எதையோ விதைத்துச் செல்கிறார்கள். தினமும் சந்திப்பவர்களை விட, அதிகம் சந்திக்காத தெரியாதவர்களிடமிருந்து தான் அதிகம் கற்றுக் கொள்கிறோம். அவ்வாறு சந்தித்த ஒரு தூய மனுஷியின் கதை தான் இது.

திருவரங்க இராஜ கோபுரம். அதன் உள்ளே நுழைந்து வெளியேறும் சாலையில், எந்நேரமும் அவசரமாக  சென்று கொண்டேயிருக்கும் மக்கள், வாகனங்கள், ஹாரன் சத்தங்கள், பூக்கடைகள், வெள்ளை எருக்கு வேர் விற்கும், பொம்மைகள் விற்கும், பாசிகள் விற்கும் சத்தங்கள், அதோடு கலந்து ஒலிக்கும் பிச்சைக்காரர்கள் சத்தமென இயக்கத்திலேயே இருக்கும் இடம். வெயிலிலிருந்து கோபுரத்தின் உள்ளே நுழையும் போது, தாக்கும் குளுமையை அனுபவிக்க விடாமல் விரட்டும் சத்தங்கள்.

கோபுரத்திலிருந்து கோவில் வரை, சாலை முழுக்கக் கடைகள். பல்வேறு வகைக் கடைகள், தரைக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் என, நம்பியோர் அனைவரையும் அருள் பாலித்து, பிழைக்க வைக்கும் சாலை. அந்த சாலையில், கோபுரத்திலிருந்து நான்காவது கடையின் வாசலோரமாய், அந்த மூதாட்டி தரையில் அமர்ந்திருப்பாள்.

காலத்தின் முடிவில்லாத கைகள் நீண்ட நாட்களாய் பொறுமையுடன் வரைந்த ஓவியமென, முதுமை செழிப்பாய் பரவியிருந்த உடல். சுற்றப்பட்ட நூல் சேலை. கூன் விழுந்து எப்போதும் நிலத்தைப் பார்த்தவாறே இருக்கும் உடலில் தலை முழுக்க, ஓவியன் வரைந்த கொக்கின் சிறகுகளை போல வெண்மை. அலை அலையாய் சுருக்கங்கள், நரைத்தப் புருவங்கள், பொக்கை வாய், தொங்கும் காது மடல்கள், சில சமயங்களில் திருநீற்றுப் பட்டை அணிந்தபடி என, எண்பத்தைந்து வயதிற்கும் மேல் இருக்கலாம். வாழ்ந்து முதிர்ந்த முழு மூதாட்டி. 

தள்ளாத வயதில் வாழ்க்கையை நகர்த்திச் செல்ல வேண்டிய கட்டாயம், அவர் முன்னே பரப்பிய பிளாஸ்டிக் சாக்கின் மேல், குவித்து வைக்கப்பட்ட இலந்தைப் பழங்கள், நெல்லிக்காய்,  கடலைகளாக, சில எலுமிச்சைப் பழங்களாகக் கிடந்தது. மொத்த மதிப்பு முந்நூறுக்கும் குறைவாகவே இருக்கும். தினசரி விற்பது ஐம்பது ரூபாய்க்கும் சற்று நெருங்கி வரவே சிரமம். அதுவே அவள் வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்கலாம். ஒவ்வொரு முறையும் கடந்து செல்லும்போதும், என் வாழ்க்கைக்கு ஒரு பிடிமானம், அவள் வழியே கிடைத்தது என்பதை அறியாத பிறவியாய் அவள் பணியில் கர்ம சிரத்தையாய் ஈடுபட்டிருப்பாள்.

கல்வியிலிருந்து, முதன் முதலாக அலுவலகப் பணிச் சூழலுக்குச் செல்லும், எல்லோருக்கும் வரும் தலையாயப் பிரச்சினை அலுவலகத்தில் வேலை செய்யாமல் ஏமாற்றுபவர்கள் கொடுக்கும் நெருக்கடி. பணி ரீதியாகவும், மனதளவிலும் நம் நம்பிக்கைகளை சிதறடிக்கும் பணியைச் சிறப்பாக செய்வார்கள். அலுவலகப் பணியில் குண்டூசியைக் கூட நகர்த்தப் பணம் கேட்பார்கள். ஆனால், அவர்களுக்கே எல்லாப் பாராட்டுகளும், எல்லாத் துன்பங்களும் நமக்கு மட்டுமே சொல்லி வைத்தார் போல,  வரும்போது கடவுளின் இருப்பு, அறம், புரபஷனல் எதிக்ஸ் என எல்லாவற்றின் மேன்மை குறித்த சந்தேகமும், அவற்றின் மீது விமர்சனமும், வைக்கும் காலகட்டத்தை கடந்து வருவது சிரமமான  விஷயம் தான். அதுவும் இளமையில் அருவியைப் போல பொங்கி வரும் கோபமும் சேரும் போது, எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையை விட்டெறிந்து விலகி விடவே தோன்றும்.

அது போன்ற உள்ளம் கொதிக்கும் ஓர் அலுவலக நாளில், அறம் என்ற ஒன்றின் மேல் சந்தேகமும், கோபமும் சேர்ந்து, பெருகி, உளம் சோர்ந்து திரும்பும் மனம் குழம்பிய ஒரு மாலைப் பொழுதில், அவளைப் பார்த்தேன். 

இதற்கு முன்னும் இந்த நெருக்கடியான சாலையில் பலமுறை நடந்து சென்றுள்ளேன். அவளை கவனிக்காததன் காரணம் தெரியவில்லை. அன்று எதேச்சையாக பார்த்த போது, நடை தானாக நின்றது. ஏனென்று தெரியவில்லை. சாலையில் எதிர்ச் சாரியில் நான் இருந்தேன். தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து, சொம்பிலிருந்த டீயை டம்ளரில் ஊற்றிக்கொண்டு மீதியை சொம்போடு தன் அருகில் அமர்ந்திருந்த இன்னொரு தரைக் கடைப் பெண்ணுக்கு கொடுத்துவிட்டு , ஊதி ஊதி குடிக்கத் தொடங்கினாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை, அவள் முகத்தை, முகத்தின் சுருக்கங்களை, குவித்து வைக்கப்பட்ட இலந்தைப்பழங்கள், நெல்லிக்காய்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். அவள் முகம் தான் எத்தனை தெளிவாக உள்ளது. ஒளி பரவும் தேவதையின் முகமென திகழ்ந்தது. அந்த ஒளி என் மனதுக்குள் பெயர் தெரியாத மலரொன்றை வீசியது. வண்ணங்களில் நிறைவான மலர். அந்த மலர் மனம் முழுவதும் இனிமையான தன் வண்ணத்தை, நறுமணத்தை பரப்பத் தொடங்கியது.

அந்த நெருக்கடியான சாலையில், கூட்டத்தின் நடுவில், நானும் என் எதிரில் அந்த மூதாட்டியும் மட்டுமேயென இருந்தோம்.
அவள் எனக்கு எதையோ போதித்துக் கொண்டிருந்தாள். நான் கைக்கட்டி அவள் முன்னே நின்றுப் பெற்றுக் கொண்டிருந்தேன். சொற்கள் அற்ற உரையாடல் எங்களுக்குள்ளே நிகழ்ந்து கொண்டிருந்தது. நொடிகள் மெதுவாக கரைந்து கொண்டிருந்தது.
காலத்தின் மீது அவள் நின்று என்னை   ஆசிர்வதித்தாள்.

பல வருடங்கள் கடந்தும், உலகை விட்டு அவள் நீங்கிய பின்னும், ஒவ்வொரு முறை மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கும் போதும்,  அந்தத் தேவதை இக்கட்டான பொழுதுகளில் என்னை தேற்றிக் கொண்டு தான் இருக்கிறாள். அவள் வீசிய மலர் இன்னும், இன்றும் வாடாமல், மனதுக்குள் குன்றாத ஒளியோடு மணம் வீசிக் கொண்டே இருக்கிறது.

என் வாழ்க்கைப் பாதையை ஒழுங்குபடுத்தியதில், ஒரு பாகம் எடுத்துக் கொண்ட
இறைவியை, அவள் இவள் என அழைப்பது ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது.

இராஜ கோபுரத்திலிருந்து பிச்சையெடுக்கும் குரல்கள் ஓங்கி ஒலித்தபடியே இருந்தன. அவள் இன்னும் அந்த டீயைக் குடித்தபடியே அமர்ந்திருந்தாள்.

Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.