சினிமா - எட்டாவது படம் - The Hateful Eight
எட்டாவது படம் - The Hateful Eight
பத்துப் படங்கள் மட்டுமே இயக்குவேன். அதன் பிறகு ஓய்வு பெற்று விடுவேன் என்று ஒரு இயக்குனர் கூறுகிறார் என்றால், அந்த இயக்குனருக்கு தனது படைப்புத் திறன் பற்றி எவ்வளவு தன்னம்பிக்கை இருக்க வேண்டும். சிலர் அதை தலைக்கனம் என்று கூறினாலும், உலகத்தின் சிறந்த இயக்குனர்களின் வரிசையில், இருக்கும் அவருக்கு தலைக்கனம் இருந்தாலும் அதில் தவறே இல்லை, ஆனால் அவரின் அந்த முடிவு, உண்மையான திரைப்பட ரசிகர்களுக்கு சோகத்தை தரக்கூடியதாக இருக்கிறது என்பது தான் வருத்தம்.
பத்துப் படங்கள் மட்டும் என்றதுமே அவர் யார் என கண்டுபிடித்து விட்டீர்கள் எனில், நீங்கள் சிறந்த திரைப்படங்களின் ரசிகர் தான். தெரியாதவர்களுக்காக, அவர் பெயர் 'குவெண்டின் டாரன்டினோ'. நான் - லீனியர் மற்றும் neo - noir வகை படங்களின் மன்னன். தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இயக்கிய ஒவ்வொரு படமும், தரமான சம்பவங்கள். வைரங்கள்.
இவரின் படங்களின் சிறப்பம்சங்கள் என்னவெனில், எளிமையான ஒரு சம்பவம், அதனை மிகத் திறமையான திரைக்கதை உத்திகளினால் உலகத் தரத்திற்கு கொண்டு சென்றிருப்பார். நான் லீனியர் திரைக்கதை என்பது, படத்தின் சம்பவங்களை முன், பின்னாக கோர்த்து கொண்டு சென்று, முக்கிய கட்டத்தில் எதிர்பாராத திருப்பங்களை கொண்டு, திரைப்படம் முழுமை பெறும்.
சிறந்த படைப்பு என்பது, அதை ரசிப்பவர்கள் மனதில் நீண்ட காலத்திற்கு அதை பற்றிய எண்ணவோட்டங்கள், சிந்தனைகளை எழுப்பும் விதமாக இருக்கும். இவரின் படங்கள் அப்படித்தான். படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரணமாக இவர் படத்தை பார்த்துவிட்டு செல்ல முடியாது. பார்க்கும்போதே, ரசிகர்களின் பங்களிப்பை கோரும் திரைக்கதை உத்தி இவருடையது.
டாரன்டினோ இயக்கும் படங்களின் அடிப்படையாக எப்போதும் ஒரு குற்ற சம்பவம் இருக்கும். இந்த வகை படங்கள் neo-noir வகை திரைப்படங்கள் எனப்படும். முழுத் திரைக்கதையும், படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும், அவர்களோடு நாமும், அந்த உச்சக்கட்ட சம்பவத்தை நோக்கி கொண்டு செல்லப் படுவோம். அந்த காட்சி, சினிமாத்தனமாக இல்லாமல், உண்மையாக, எளிய மனம் படைத்தவர்கள் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் வன்முறைத்தனமாக இருக்கும்.
வன்முறை நிறைந்த படங்களை பட்டியலிட்டால், படம் முழுவதும் வன்முறைக் காட்சிகளை கொண்ட படங்களை விட, ஒரு சில காட்சிகள் மட்டுமே கொண்ட இவரது படங்கள் தான் முன்னணியின் நிற்கும். எனில் அந்த காட்சிகளின் முக்கியத்துவம் மற்றும் ஊதிக் கொண்டே செல்லும் பலூன் ஒரு கட்டத்தில் வெடிப்பது போல, அந்த உச்சகட்ட காட்சி திரைப்படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும்.
டாரன்டினோ படங்களின் மற்றொரு சிறப்பம்சம், படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கதையின் முன்னேற்றத்திற்கு அளிக்கும் பங்கு தான். மிகச்சிறிய ஒரு கதாபாத்திரத்திற்கும் முக்கியமான பணி வழங்கப்பட்டிருக்கும். வீணாக வந்து போகாது. அவ்வளவு நுணுக்கமாக பாத்திரங்களை வடிவமைப்பு செய்திருப்பார்.
இவர் படங்களில், வசனங்கள் மற்றும் பின்னணி இசை முக்கிய பங்காற்றுகின்றன. படம் முழுவதும் நடிகர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். அந்த வசனங்கள் தான் படத்தை நகர்த்தி செல்லும் ஊர்தி. மெதுவாகத் தான் நகரும் எனவே நல்ல அனுபவத்திற்கு பொறுமை அவசியம், என்பதற்கு இவர் படங்கள் உதாரணம். இன்னொரு இனிமையான பகுதி, பாடல்கள். ஆம், அருமையான இசையுடன் கூடிய ஒன்றிரண்டு பாடல்கள், தமிழ்ப்படங்கள் போல தனியாக வராது, காட்சிகளின் பின்னணியில் வரும். 1970-1980 களில் உள்ளது போன்ற இசை மனதை கொள்ளையடிக்கும்.
இது போல, குவெண்டின் டாரன்டினோ படங்களை பற்றி,. சிறப்பம்சங்கள் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அதை படமாக பார்த்து, அனுபவித்து பாருங்கள். வேறொரு தளத்திற்கு உங்களது ரசனைகளை எடுத்துச் செல்லும் படங்களாக இருக்கும். அதில் நான் கடைசியாக பார்த்த படம் பற்றி பார்ப்போம்.
குவெண்டின் டாரன்டினோ இயக்கிய அனைத்து படங்களையும் தேடித் தேடி பார்த்தேன். அனைத்து படங்களையும் பார்த்துக் கொண்டிருந்த போது, இந்த படமும் வந்தது. தொடக்கத்தில், மிகவும் பொறுமையை சோதித்தது. பேசிக் கொண்டே இருந்தார்கள், ஆங்கிலத்தில் வேறு. எனவே, அரை மணி நேரத்திற்கு பிறகு தூக்கி போட்டுவிட்டேன். பின் கடைசியாக இயக்கிய 'Once Upon a time in Hollywood' படம் தமிழ் டப்பிங்கில், பார்த்த பிறகு, ஆர்வம் வரவே, பின் மீதி உள்ள ஒரே படமான இதையும் பார்த்து விட்டால், குவெண்டினின் அனைத்து, படைப்புகளையும் பார்த்து விட்ட திருப்தி கிடைக்கும் என்பதால், மிகவும் பொறுமையுடன் மீண்டும் பார்த்தேன். அந்த படத்தை பற்றி இந்த கட்டுரையை, எழுத வைக்கும் அளவுக்கு, அனுபவத்தை தந்தது அந்த படம். அதை பற்றி இனி.
'The Hateful Eight' டாரன்டினோ இயக்கிய எட்டாவது படம். 2015 இல் வெளிவந்தது. வெஸ்டர்ன் வகை (Western genre) திரைப்படம். இந்த வகையில், இவர் இயக்கிய இரண்டாவது படம் இது. படத்தின் கதை மற்றும் கவர்ந்த விதம் பற்றி மட்டுமே நான் கூறப் போகிறேன். ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் விதமாக, இருக்கும் என்பதை பற்றி திரும்ப, திரும்ப சொல்ல வேண்டியதில்லை. அதை படம் பார்த்து நீங்களே அனுபவியுங்கள். நிச்சயம் இரசிப்பீர்கள்.
Comments
Post a Comment