இரண்டே நாட்களில் பூக்குழி நாவலை வாசிக்க முடிந்தது. அளவில் சிறிய நாவல். கதையும் சிறியதே. நீட்டி எழுதப்பட்ட சிறுகதை போலவே உள்ளம் உணர்ந்தது. இதற்கு முன் மாதொரு பாகன் மட்டுமே வாசித்திருக்க, இந்நாவலை இந்த வாரம் வாசிக்கத் தொடங்கினேன். ஆணவப் படுகொலை நடக்கும் மேற்கு மாவட்டங்களில், ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. குமரேசன், வேற்று சாதியைச் சார்ந்த சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அழைத்து வருகிறான். தினமும் நெல்லாஞ்சோறு சாப்பிடக் கூட வழியில்லாத கூரை வீடுகளில் வாழும் மனிதர் மனங்களில் சொந்த சாதிப் பெருமை கோபுரம் கட்டிப் பாதுகாப்பாய் வாழ்கிறது. தாய், மாமன்கள், அப்புச்சி என எல்லாரும் சரோஜாவை வெறுப்பால் விரட்டுகிறார்கள். சிறிய டவுனில் சந்தோசமாய் வாழ்ந்தவள் இந்த பாறைக்களத்தில் குமைந்து, நசிந்து குமரேசன் அன்பை மட்டுமே பிடித்துக் கொள்கிறாள். திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஊர் கூட்டத்தில் குமரேசன் குடும்பத்தைத் தள்ளி வைக்கிறார்கள். சரோஜாவின் சாதியையும் தெரிந்து கொள்கிறார்கள். திருவிழாவிற்கு முன் ஊரை சுத்தப்படுத்தி விட வேண்டுமென சரோஜாவை கொல்வதற்கு முடிவெடுக்கப்படுகிறது. சோடா கடை போடுவது தொடர்பா...
மனம் வெறுமையாய் இருக்கும்போது அவ்வப்போது காவேரி ஆற்றின் கரையில் நிற்பதுண்டு. எதிரே அம்மா மண்டபம் படித்துறை தெரிய, இரண்டு கரைகளுக்கும் நடுவில் மணல் பெருகி, மின்னிக்கொண்டு கிடந்தது. ஊடே கோரையும் அதன் தலையில் வெள்ளை நிறப் பூக்களும். ஆற்றின் நடுவில் நீரேற்றும் நிலையத்தை சுற்றிக் கொண்டு தண்ணீர் கொஞ்சமாய் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு இடப்பக்கம் தூங்குமூஞ்சி மரமும் அருகில் அடர்த்தியாய் மாமரமொன்றும் நின்று கொண்டிருந்தன. மாமரம் பிஞ்சுகளால் நிறைந்து கிடந்தது. காற்றில் சேர்ந்தாற்போல் கிளையில் பிஞ்சுகள் அசைவது அழகாய் இருந்தது, சிறு குழந்தைகள் ஒன்றாய் கைகோர்த்துக் கொண்டு ஆடுவது போல. தவிட்டுக் குருவிகள் சிலவும், அணில்களும் கிளைகளுக்கிடையே தாவிக் கொண்டிருக்க, அவைகளின் ஒலிகளுக்கிடையே இதுவரை கேட்காத பறவை ஒன்றின் ஓசை மெல்லியதாய் கேட்டது. அருகிலிருந்த தூங்குமூஞ்சி மரத்திலிருந்து அணில்கள் மாமரத்திற்கு குதித்து இலைகளை அசைத்துக் கொண்டும் சத்தமிட்டுக் கொண்டுமிருக்க, அப்பறவையின் ஒலியைக் கொண்டு இருக்குமிடத்தை அறிய முடியவில்லை. சிறிது நேரம் உற்றுக் கவனித்ததில் மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் தென்பட்...
சன்னல்களில் திரை போட்டு மறைத்தும் 42 டிகிரி செல்சியஸ் வெயில் அறை முழுக்க வெப்பத்தை, ஒளியை பாய்ச்சுகிறது. உடல் முழுக்க வியர்வை கசிந்து கொண்டே இருக்கின்ற வெப்பத்தில், இவை பற்றிய எந்தவொரு உணர்வும் வராத அளவிற்கு வாசிப்பில் கட்டிப் போட்டு பிணைத்துக் கொண்ட கதை. இரவில் விழித்தும் பகலில் உறக்கமும் கொள்ளும் இரவுலாவி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சில மனிதர்கள் பற்றிய கதை. இரவு வாழ்க்கையின் மேன்மைகளைப் பற்றி, இரவில் இயற்கையும், பொருட்களும் கொள்ளும் அழகைப் பற்றி, இரவு வாழ்க்கையில் எல்லா உயிரினங்களும் எப்படியெல்லாம் மகிழ்ச்சியோடு இருக்கின்றன என விவரிக்கும் இடங்களில், அவ்வாழ்க்கையை நாமும் வாழ்ந்து பார்க்க ஆசையும் ஏக்கமும் எழுகின்றது. கேரளாவின் காயல் அதில் ஒடும் படகுகள், தென்னை மரங்கள் போன்றவை இரவு நேரத்தில் எத்தனை அழகாய் உள்ளன என்பதை சிறப்பான வர்ணனைகள் மூலம் கூறும் விதம் மயக்குகிறது. முதல் அத்தியாயம் முடிவதற்குள்ளாகவே நமது கவனத்தைக் கதை அள்ளி எடுத்துக் கொண்டு வேகமாக பறக்கிறது. கதையின் ஊடாக வரும் இரண்டு யட்சிகள் அவர்களோடு உருவாகும் காதல் அதன் பின்னணியில் நாயகனின் மனம் கொள்ளும...
Comments
Post a Comment