4. காடு சில சிந்தனைகள்- வியல் - விரிந்து பரந்த பெருங்காடு.
காடு சில சிந்தனைகள்.
4. வியல் - விரிந்து பரந்த பெருங்காடு.
சிறியூர் கிராமத்திற்கு செல்லும் வழி விரிந்து பரந்த காட்டின் இடையே ஊடாடிச் செல்கிறது. அவ்வழியே சென்றால், பல்வேறு வன விலங்குகளை பார்க்க முடியும் என்று கிளம்பினோம். குறிப்பாக காட்டு யானையை பார்க்க வேண்டும் என்று. இதுவரை காட்டு யானையை பார்த்ததில்லை. அந்த ஊர் செல்லும் வழியில் கண்டிப்பாக பார்க்கலாம் என்று தகவல்கள் கிடைத்ததனால், காலை எல்லோரையும் போல ரோஸ் கார்டன் சென்று விட்டு, மதிய உணவை முடித்து விட்டுக் கிளம்பினோம்.
உதகை நகர்ப் பகுதியை விட்டு, மைசூர் செல்லும் சாலை வழியே, மலையை விட்டு கீழே இறங்கும் பகுதிகளில் தான் உண்மையான காடு நம்மை வரவேற்கிறது. அபாயமான கொண்டை ஊசி வளைவுகள் இருப்பதால் மெதுவாக செல்ல வேண்டியது அவசியம். நாங்கள் சென்ற சில நிமிடங்களுக்கு, முன்பு தான் பெரும் மழை பெய்து நின்றிருந்தது. எனவே சாலை முழுவதும் வெள்ளம் வேகமாக கீழ் நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது. வாகனத்தை மெதுவாகவே செலுத்தினோம். தொலைவில் ஒரு மலையின் உச்சியில், அடர் பழுப்பு நிறத்தில் திடீர் அருவி, சற்று முன் பெய்த மழை நீர் முழுவதையும் மொத்தமாக கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.
கீழே இறங்கும் வரை இரண்டு பக்கமும் சரிவுகளில் காடுகள் அடர்த்தியாக உயர்ந்த மரங்களோடு காணப்படுகின்றன. அந்த சாலையில் உள்ள பைசன் பள்ளத்தாக்கு காட்சி முனையை கண்டிப்பாக தவற விடக் கூடாது. அந்த பள்ளத்தாக்கில் நாங்கள் சென்ற போது, காட்டு மாடுகள் காணப்பட வில்லை. ஆனால், மிக அழகான காடு அங்கே பள்ளத்தில் கிடக்கிறது. அடர் பச்சை நிற கூம்புகளை நெருக்கமாக நிறுத்தி வைத்தது போல மரங்கள். பச்சை நிறத்தின், பல்வேறு துணை வண்ணங்களை இலைகளில் சூடி நிற்கின்றன மரங்கள். பறவைகளின் இனிமையான ஒலிகள், மலைச்சரிவின் கீழிருந்து மேலெழும்பி, எலும்புகள் வரை பாயும் குளிர்காற்று என, நாள் முழுவதும் அங்கேயே நின்று கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கலாம்.
5. மிளை - அரசனது காவலில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடு.
ஊட்டியிலிருந்து மசினகுடி, மைசூர் செல்லும் சாலையில், மலையை விட்டு இறங்கி வாழைத் தோட்டம் என்ற ஊரை அடைந்தோம். மிக அழகான ஊர். எட்டுத் திசையிலும் காடு சூழ்ந்து கிடக்கும். அங்கே இருந்த, எங்களின் நண்பர்தான் சிறியூர் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்து, வனத்துறையில் அனுமதியும் முன்னரே பெற்று வைத்திருந்தார்.
முதலில் அந்த ஊரில் இருந்த ஒரு தனியார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காட்சிக் கோபுரத்திற்கு சென்றோம். ஊரின் எல்லையில், காட்டின் தொடக்கத்தில் கம்பி முள்வேலிக்கு முன்னால் இருந்தது கோபுரம். அதில் ஏறிச் சென்று காட்டை பார்த்தோம். மலையிலிருந்து இறங்குகையில், பள்ளத்தாக்கில் கிடந்த அடர்பச்சை நிற காடு கண்களுக்கு இதமாக, குளுமையாக இருந்தது. ஆனால் இங்கே அந்த அடர்த்தியான பசுமை இல்லை. செம்பழுப்பு நிலம் விரிந்து கிடக்க, மரங்களும், புதர்களும் இடையிடையே செம்மண் நிலமும் இருந்தது. மான்கள், யானைகள் இயக்கத்தால் ஏற்பட்ட, சிறிய மண்பாதைகள் உள்ளே ஓடிக் கொண்டிருந்தன. மலை மேலே உள்ள காடுகளுக்கும், நிலத்தில் விரிந்து கிடக்கும் காட்டிற்கும் உள்ள வேறுபாடு அங்கே நன்றாக தெரிந்தது.
வெப்பநிலை வேறுபாடு காட்டின் பண்பை முடிவு செய்கிறது என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான். அதை நேரில் கண்டு உணர முடிந்தது. குறு மரங்களும், புதர்களும் செறிந்து காணப்பட்டது. காய்ந்து உடைந்த மரங்கள், கிளைகள் காய்ந்த புற்கள், இவைகளுக்கு இடையே உள்ள நிலப் பகுதிகளில் வெயில் பளீரிடுவது தெரிந்தது. ஆனால் காடு விரிந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரவிக் கிடந்தது.
காட்சிக் கோபுரத்திலிருந்து விலங்குகள் ஏதும் தெரிகிறதா என்று பார்த்தோம். எதுவும் தெரியவில்லை. ஆரம்ப அலைபாய்தலுக்கு பின், சிறிது நேரம் கழித்து, நிலப்பகுதிக்கு கண்கள் பழகியது. அதன் பின் தொலைவில் மரங்கள், புதர்களுக்கிடையே ஆங்காங்கே, புள்ளி மான்கள் தங்கள் குட்டிகளுடன் நின்று கொண்டிருந்தது தெளிவாக தெரியத் தொடங்கியது. முதன்முறையாக அதன் இயற்கை வாழிடத்தில் பார்க்கிறேன். மனம் மகிழ்ச்சியில் குதித்தது. கண்கள் மேலும் மேலும் தேடி மான்களை கண்டுகொண்டது. பின்னர் யானை எதுவும் தெரிகிறதா என்று தேடித் தேடிப் பார்த்தோம்.
"மதிய வெயில் நேரத்தில் வெளியே வரமாட்டாங்க, சிறியூர் போகும் வழியில் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கானு பார்ப்போம், சீக்கிரம் கிளம்புங்க", என்று நண்பர் கூறவும் கிளம்பினோம்.
இன்று எப்படியாவது காட்டு யானையை பார்த்து விட வேண்டும் என்று, மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
-சிறியூர் போகும் வழியில்..,
Comments
Post a Comment