3. காடு சில சிந்தனைகள்- ஆரண்யம் - ஒரு பயணம்.

 

காடு சில சிந்தனைகள்

3.ஆரண்யம் - ஒரு பயணம்.

ஒரு காட்டை வரைந்து பாருங்கள் அல்லது மனதில் கற்பனை செய்யுங்கள் என்றால், என்ன செய்வீர்கள். தொலைவில் மலைகள். சிறிதும் பெரிதுமாய் அடர்ந்த மரங்கள். நடுவில் அல்லது ஓரமாய் ஒரு நதி மலையிலிருந்து இறங்கி ஓடி வர, அதன் கரைகளில் சிறிய புதர்களும், புற்களும் பசுமையாய் கிடக்கும். முயல்கள், மான்கள் அவற்றை மேய்ந்து கொண்டிருக்கும். யானை தன் குட்டியுடன் நடந்து செல்லும். மயில்கள் மரங்களில் அமர்ந்திருக்க, பறவைகள் வானத்தில் சிறகடித்துப் பறக்கும். முடிந்தால் மேலும் சில மிருகங்கள் என, இப்படித்தானே காடு என்பது நமது சிந்தனையில் வளர்ந்திருக்கிறது.

நமது கற்பனையில் உள்ள அந்த அடர்ந்த வனமும், விலங்குகளும் என, என்றாவது உண்மையில் சென்று பார்த்ததுண்டா? உண்மையில் அது போல வனம் இருக்கிறதா?

மலைகளில் இருந்த அடர்ந்த காடுகளை, அழித்து தேயிலைத் தோட்டங்களாக மாற்றி விட்டோம். தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதிகளான, உயிர்க்கோளப் பகுதிகள், தேசியப் பூங்காக்கள், சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டப் பகுதிகளில் மட்டுமே காடு என்பது உயிர்ப்புடன் உள்ளது. மீதமுள்ள, நாம் வனம் என்றழைக்கப்படும் பகுதிகளில் மரங்கள் கூட்டம் தான் உள்ளது. சாலைகள் ஊடாடிச் செல்லும் வனங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன. அங்கே பெயருக்கு மட்டுமே காடு மரங்களுடன் நிற்கிறது.

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள், உரிய அனுமதியின்றி எவரும் அவ்வளவு சுலபமாக நுழைந்து விட முடியாது. அது போன்ற ஒரு வனப் பகுதியில், அனுமதி பெற்றுச் சென்ற ஒரு சுவாரஸ்யமான கானுலாவைப் பற்றி இந்த பகுதியில் காண்போம்.

ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஸ் கார்டன், தொட்டபெட்டா சிகரம் இவற்றைச் சுற்றிப் பார்த்து விட்டு, கேரட் சாப்பிடுவது போல புகைப்படம், ஊட்டி வறுக்கி, சாக்லேட் என்று முடித்து விடுவார்கள். இன்னும் சிலர் இதோடு குன்னூர், கோத்தகிரி கொடநாடு காட்சி முனையோடு முடிப்பார்கள்.

மேலேச் சொன்ன பகுதிகள் உண்மையான இயற்கை ஆர்வலர்களுக்கு ஆர்வம் தருவதில்லை. மக்கள் கூட்டமும், வாகன நெருக்கடியும், புகையும், கட்டடங்களும் ஊட்டியில் அதிகமாகி குளிர்ச்சியான ஒரு சமவெளி நகரம் போலத்தான் உள்ளது.

இவற்றையெல்லாம் வெறுத்து தான், இயற்கையை நாடி ஓடுகிறோம். அங்கும் இப்படி என்றால்? நீலகிரியில் இன்னும் இயற்கை மாசுபடாத பகுதிகள் உள்ளன.

நீலகிரி பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளப் பகுதியின் ஒரு அங்கமாக முதுமலை தேசியப் பூங்கா வருகின்றது. இதில் சிறியூர் என்ற கிராமம், அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது.

Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.