சினிமா - CAST AWAY

தனிமையின் நான்கு வருடங்கள் 

 Cast Away - சினிமா.

மனிதன் பரிணமித்த நாள் முதலே கூட்டமாகவே வாழ்கிறான், கூட்டத்தோடு இடைவினைகள் புரிகிறான். தான் வாழும் கூட்டத்தில் தனித்துவமாக தெரிவதற்காக, தன்னை கவனிக்க வேண்டுவதற்காக  பல்வேறு செயல்களை புரிகிறான். தன்னை பாராட்ட வேண்டி யாரும் செய்ய இயலாத செயல்களை, சாகசங்களை செய்ய துணிகிறான்.

தன்னை சுற்றியுள்ளவர்கள் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. எனக்கு யாரும் தேவையில்லை, யாருமில்லாமல் என்னால் தனியாக வாழ முடியும், என்று வீம்புக்கு கூறினாலும், ஆழ்மனதில் மனிதனானவன் தனிமையை எண்ணி பயம் கொள்கிறான். தனிமை அவன் உள்ளத்தின் உறுதியை குலைக்கிறது. மனச்சிதைவை ஏற்படுத்துகிறது. கூட்டத்தில் இருக்கும்பொழுது இருட்டில் கூட பயப்படாத மனிதன், பகல் பொழுதில் தனிமையில் இருக்கும்போது, தடுமாறுகிறான். அஞ்சுகிறான். எனவே தான் தனிமையை வெறுக்கிறான். 



இந்த படத்தின் நாயகன், சக் நோலாண்ட் (டாம் ஹாங்க்ஸ்) FedEx கூரியர் நிறுவனத்தில், கணினிப் பிரிவில் பணிபுரிகிறான். உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள, நிறுவனத்தின் அலுவலகங்களின் கணினிகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்பவன். 1995 ஆம் வருடம், கணினி சரி செய்வதற்காக மலேசியா செல்லும் வழியில், புயலில் சிக்கி விபத்து ஏற்பட்டு, விமானம் பசிபிக்  கடலில் மூழ்குகிறது.

விபத்தில் அனைவரும் இறந்து விட, நோலாண்ட் மட்டும் பிழைத்து, ஒரு தீவில் கண் விழிக்கிறான். மனிதர்கள் யாருமில்லாத தீவில் தனியாக மாட்டிக் கொள்கிறான். தப்பித்து வர போராடுகிறான். முயற்சிகள் தோல்வியடைகின்றன. நாட்கள் செல்லச் செல்ல, நம்பிக்கை இழந்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறான். அதுவும் தோல்வியடைய, மனரீதியாக அவன் அடையும் பாதிப்புகள், உணவுக்காக, உயிர் வாழ்வதற்காக அவன் செய்யும் செயல்கள் என இந்த படம் உளவியல் ரீதியாக நம்மை ஆட்கொள்கிறது. 




தீவில் வளர்ந்திருக்கும் தென்னைகளிலிருந்து இளநீர்களையும், மீன்களையும் வேட்டையாடி பச்சையாக உண்கிறான். பின் நெருப்பை உண்டாக்க ஆதி மனிதன் போல மரக்கட்டைகளை தேய்த்து தீ மூட்டுகிறான். இவை
சிறந்த Survival படமாகவும் நமக்கு ஆர்வமூட்டுகிறது.



இந்த படத்தின் இன்னொரு முக்கியமான கேரக்டர், நாயகனின் பேச்சுத்துணை ஒரு கைப்பந்து. விமானத்தில் வந்த ஒரு பார்சலில் கிடைத்த பந்து அது. முதன்முறை தீ மூட்ட முயற்சி செய்யும் போது, மரக்கட்டை கையை கிழித்து விட இரத்தம் கொட்டுகிறது. வேதனையிலும், கோபத்திலும் அருகிலிருந்த பந்தை எடுத்து எறிகிறான். 




பந்தில் அவன் கையின் இரத்த அச்சு படிந்திருக்க, அதில் கண்கள், மூக்கு, வாய் என வரைகிறான். மனித முகம் போல தோற்றம் கொண்ட அந்த பந்திற்கு வில்சன் என்று பெயரிடுகிறான். படம் முழுவதும் நாயகன், வில்சனுடன் உரையாடல்கள் நிகழ்த்துகிறான். காதலியை எண்ணிய துயரம், கோபம், பாசம், வலி, ஏமாற்றம் போன்ற உணர்வுகளுக்கு பங்காளியாகவும் பேச்சுத்துணையாகவும் இருந்து, மனச் சிதைவு ஏற்படாமல் அவனை காக்கிறது வில்சன். முழுக்க முழுக்க தனிமையில் மனிதனால் இருக்க முடியாது என்பது புரிகிறது.

தீவிலிருந்து, மரக்கட்டைகளை கொண்டு செய்த படகு மூலம் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைய, நான்கு வருடங்கள் உருண்டோடுகிறது. இறுதியில் கடல் காற்று சரியான திசையில் வீசும் நாளை கணக்கிட்டு, தீவிலிருந்து படகில் கிளம்புகிறான். இயற்கை மீண்டும் சதி செய்ய, பலத்த காற்று, மழை படகை சேதப்படுத்துகிறது. உணவாக கொண்டு வந்த இளநீர் காய்கள், வில்சனுடன் கடலில் விழுந்து விட, நம்பிக்கை இழந்து, படகில் தனிமையில் கடலில், வெயிலில் கிடக்கிறான். அப்போது அவன் முகத்தில் ஒரு நிழல் விழுகிறது. கண் விழித்து பார்க்கிறான். அது ஒரு சரக்குக் கப்பல். காப்பற்றப்படுகிறான். 



இறுதியில், தான் வாழ்ந்த ஊரை அடையும் போது, இதுவரை அடைந்த துன்பத்தை விட பெருந்துன்பம் அவனை தாக்குகிறது. நான்கு வருடத்தில் அவன் இறந்ததாக கருதி, அவனுக்கான இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு விட்டதாக நண்பன் கூறுகிறான். அமைதியான அறையில், கொட்டும் மழை சத்தம் மட்டுமே  பின்னணி இசையாக ஒலிக்க, தீவில் தான் பட்ட அனுபவங்களை விளக்கும் காட்சி கவிதை.


தன் காதலியை சந்திக்க செல்ல முயலும் போது, அவளைப் பற்றிய உண்மையை சொல்ல முடியாமல் நண்பன் தவிக்கிறான். யாருக்காக தீவிலிருந்து தப்பித்தானோ அந்த காதலி, இவன் இறந்து விட்டதாக கருதி வேறொருவனை மணந்து வாழ்கிறாள். நேரில் சென்று பார்க்கும் போது, இருவரும் அடையும் துயரம், இதை விட வேறு என்ன வலி இருந்துவிட போகிறது வாழ்க்கையில். மீண்டும் தனியனாக செல்கிறான். தனியனாய் இருந்தாலும் வாழ்க்கையை, வாழ்ந்துதானே ஆக வேண்டியிருக்கிறது.

டாம் ஹாங்க்ஸ், தனது சிறப்பான நடிப்பின் மூலம் தனி ஒருவனாக படத்தை தாங்குகிறார். த டாவின்சி கோட் திரைப்படம் மூலமாகவே அனைவருக்கும் தெரிந்த முகமாக இருந்தாலும், அதற்கு முன்னரே, Philadelphia, Forrest gump ஆகிய படங்களுக்கு தொடர்ந்து இரண்டு முறை, நடிப்பிற்கான ஆஸ்கர் விருது பெற்றவர். Saving Private Ryan, The Terminal போன்ற  சிறந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். Cast Away படத்திற்காக கோல்டன் குளோப் விருது கிடைத்தது.

2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த படத்தை இராபர்ட் செமிக்கிஸ் இயக்கியுள்ளார். 90 மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், 429 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தது. ஒவ்வொருவரும் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. 

Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.