1.காடு : சில சிந்தனைகள்.
காடு : சில சிந்தனைகள்.
காடுகளுடன் எனது அனுபவங்கள், பயணக் குறிப்புகள், வாசித்தவைகள் மற்றும் காடுகள், மலைகள் குறித்து அவ்வப்போது தோன்றும் சிந்தனைகளை இந்த தொடரில் எழுத எண்ணியுள்ளேன்.
எந்த வித திட்டமிடலும் இல்லாமல், மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதப் போவதால், பாகங்களுக்கிடையே தொடர்ச்சியை எதிர்பார்க்க வேண்டாம் என்று முன்னரே கூறிக் கொள்கிறேன்.
ஆனால், இந்த தொடரில் எழுதப் போகும் அனைத்திற்கும் ஒரு தொடர்ச்சி கண்டிப்பாக இருக்கும். அது உங்களுக்கும், இயற்கைக்கும் இடையே உள்ள உறவுகளைப் பற்றி பேசுவதாக இருக்கும்.
******************************************
1.காடு.
காடு நீங்கள் சினிமாவில் பார்த்தது போலவோ, கதைகளில் படித்தது போலவோ இருப்பதில்லை. முற்றிலும் வேறானது. அங்கே எப்போதும், எந்த நொடியும் நீங்கள் எதிர்பாராத ரகசியங்கள் உங்களை சந்திக்க காத்திருக்கும். கேள்விப்பட்ட விஷயங்களை கொண்டு காட்டை அணுகுதல் கூடாது. காட்டுக்குள் நீங்கள் சற்றுக் கவனக் குறைவாக இருந்தால் கூட போதும், சிறிய பூச்சியை கூட கருணையுடன் அரவணைத்துக் கொள்ளும் காடு, உங்களை சிறிதும் கருணையே இல்லாமல் சாப்பிட்டு விட தயாராய் இருக்கும்.
எங்கும் பசுமை நிறைந்த காடு, உங்களை உள்ளே வா, வா என்று அழைத்துக் கொண்டிருக்கும். காட்டை புரிந்து கொண்டால், உணர்ந்து கொண்டால், காட்டுடன் ஒன்றி விட்டால் அது உங்கள் பின்னேயே ஒடி வரும். தன் ரகசியங்களை, பொக்கிஷங்களை உங்களுக்கு திறந்து காட்டும்.
எத்தனை வகையான உயிரினங்கள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள், தாவரங்கள், மூலிகைகள் என காடு எப்போதும் நம்மை தன்னை நோக்கி ஈர்த்துக் கொண்டே தான் இருக்கிறது. மனிதன் காட்டுக்குள் பரிணமித்து, வளர்ச்சியடைந்து, வேட்டையாடி, இனப்பெருக்கம் செய்து பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த நினைவுகள் தான், இன்னும் நம்மை அங்கே அழைத்துக் கொண்டிருக்கிறது.
மனித வரலாற்றின் ஏதோ ஒரு நொடியில் காடு மனிதனுக்கு ஒவ்வாமை ஆகியிருக்கிறது அல்லது காட்டிற்கு மனிதனை ஓவ்வாமல் ஆகி, அவனை வெளியே துப்பியிருக்கிறது. அன்று மனிதன் காட்டை விட்டு வெளியே வந்தான் அல்லது விரட்டப்பட்டான்.
இருண்ட கண்டத்தின் காடுகளிலிருந்து கிளம்பி, இந்த உலகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றான். செல்லுமிடமெல்லாம் காட்டை வெறி கொண்டு தாக்கினான். அழித்தான். காடு தன் பாதுகாப்பிற்காக வைத்துக் கொண்ட விலங்குகளை கொடூரமாக கொன்றான்.
சாலைகளால் காட்டை பிளந்தான். புகையை பெருக்கி காட்டின் சுவாசத்தை இறுக்கினான். மூச்சு திணறியது காடு.
சிலர் காடுகளின் மடியில் சென்று, மன்னிப்பு கோரி மீண்டும் இணைந்தனர். அவர்களை விரட்டினான். காட்டை விட்டு விலகாதவர்களை வேற்றினம் என்று, அவர்களை மீதம் வைக்காமல் கொன்றான்.
மலையிலிருந்து இறங்கி சமவெளியை நோக்கி வளர்ந்து, பரவிய காட்டை மீண்டும் மலையடிவாரத்திற்கே விரட்டினான். மலை மேலே சென்றவன் அங்கிருந்த காட்டை கீழே துரத்தினான். மனிதன் இறங்க முடியாத மலைச்சரிவுகளில் சென்று ஒளிந்து கொண்டது காடு.
மனிதனும், காடும் ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுக்கிய அந்த வரலாற்று நொடிக்கு முந்தைய கணத்தில் என்ன நடந்திருக்கும்? ஏன் மனிதன் இப்படி கொடூரமாக, காட்டை பலி வாங்குகிறான்?



Comments
Post a Comment