2. காடு : சில சிந்தனைகள்: வனம்

காடு : சில சிந்தனைகள்.

2. வனம்

பல்லாயிரக் கணக்கான 
உயிர்களால் ஆன,
ஒற்றை உயிர்
வனம்.



ஆதியில் மனிதன் தனியாக, நாடோடியாக வனங்களில் சுற்றினான். வேட்டையாடியும், தாவர உணவு வகைகளை சேகரித்தும் தனக்கான உணவு தேவைகளை நிறைவேற்றிக் கொண்டான். விலங்கினங்கள் போல பார்க்கும் பெண்ணினத்துடன் உறவு கொண்டான். அன்றன்றைய தேவைகளை அன்றோடு பூர்த்தி செய்து கொண்டான். மறுநாள் பற்றிய கவலையோ, எதிர்காலத் தேவைகளைப் பற்றிய எண்ணங்களே இல்லாமல் இருந்தான். வேட்டையாடி உணவு சேகரித்து உண்ட வரை, காட்டின் ஆன்மாவோடு இரண்டற கலந்து,  உணவளிக்கும் காட்டின் முக்கியத்துவம் அறிந்திருந்தான். உணர்வுப் பூர்வமான ஒரு உறவு அவனுக்கும் காட்டிற்கும் இடையே இருந்தது.



அதுவரை காடும் அவனுக்கு தேவையானதை வழங்கிக் கொண்டிருந்தது. கண் முன்னே கடல் போல விரிந்திருந்த காட்டின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தான். எனவே உணவை எதிர்காலத் தேவைகளுக்கு, சேகரித்து வைப்பது குறித்து எந்த கவலையும் இல்லை. தான், தனக்கு, தன்னுடையது என்ற உணர்வுகள் என்று அவனிடம் தோன்றத் தொடங்கியதோ, அன்றிலிருந்து அவன் நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. சுயநலம் சார்ந்து சிந்திக்க தொடங்கினான்.


தனக்கென ஒரு பெண்ணை உரிமைப்படுத்த எண்ணினான்.  குடும்பம் என்ற ஒரு அமைப்பு உண்டானது. பிறரை சார்ந்து வாழ்தல் என்ற வாழ்க்கை முறைக்குள் நுழைந்தான். எதிர்காலத் தேவைகள் பற்றிய சிந்தனை உருவாகி தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு உணவை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனிதனுக்கு உண்டானது. வனத்தில் மனிதக் கூட்டம் பெருகியது. தேவையும் பெருகியது.


அதிகப்படியான உணவுத் தேவையை நிறைவு செய்ய விலங்குகளை, பறவைகளை அதிகம் வேட்டையாடினான். தாவரங்களை அழித்தான். குகைகளில், மரப் பொந்துகளில், கிளைகளில் வாழ்ந்தவன், மரங்களை, கிளைகளை வெட்டித் தங்குமிடம் அமைத்தான். 

அதிக உணவு தந்த ஆற்றல், மனிதனின் மூளையை வளர்ச்சியடையச் செய்தது. சிந்திக்கும் திறன் அதிகமானது. புதிய கருவிகள் கண்டு பிடித்தான். உடலில் பெருகிய ஆற்றலும், புதிய கருவிகளும் அவனில் சாகச உணர்வைத் தூண்டின.



உணவுக்காக வேட்டையாடிய தான் என்ற எண்ணம் பெருகிய மனிதன், சுய மகிழ்ச்சிக்காக, சாகச உணர்வுக்காக, பிறர் கவனத்தை ஈர்க்கவும், பெண்களை கவர்வதற்காகவும், அதிகமாக விலங்குகளை வேட்டையாடத் தொடங்கினான்.



வெறி மிகுந்த  மனிதனைக் கண்டு விலங்குகள் பயந்தோடின. மான்கள் பதுங்கிக் கொண்டன. முயல்கள் தங்கள் வளைகளின் இருளில் மறைந்தன. பறவைகள் மரங்களில் அமர்வதை வெறுத்தன.  கனி தரும் மரங்கள் பயத்தில் வெளிறிப் போய், பூக்காமல் நின்றன. கிழங்குகள் பூமியின் ஆழத்திற்கு இறங்கிச் சென்று பெருமூச்சு விட்டன.




தன் மடியில் வளர்ந்தவன், அசுரன் போல தன்னை அழிப்பதை கண்டு வனம் வாடியது. தன் பொக்கிஷங்களை மனிதனின் கண்களுக்கு காட்டாமல் மறைக்கத் தொடங்கியது. உணவு வழங்குவதை குறைத்தது. உணவு வழங்க மறுத்த காட்டின் மேல் வஞ்சம் கொண்டான். மனிதனுக்கும் வனத்திற்கும் தீராப் பகையாக மாறியது.

புதிய காடுகளைத் தேடி மனிதன் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இருண்ட கண்டத்தின் வனங்களிலிருந்து வெளியேறி, உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, தன் வஞ்சத்தை வனங்களில் மேல் காட்டினான். காடுகளை அழிக்கத் துவங்கினான், மனித ஒட்டுண்ணி.

Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.