நகரத்திலிருந்து வெளியேறும் ரயில் வண்டிகள்..,
தொலை தூரம் செல்லும்
ரயில் வண்டி.
முன்பதிவு பெட்டி.
நகரத் தொடங்கிய போது,
நெருக்கியடித்து
ஏறிய கூட்டத்தில்
உள்ளே உந்தப்பட்டவள்,
தனியளாகியதும்
கழிவறை கதவருகில்
அமர்ந்தாள்.
நரைத்து, பறக்கும்
தலை முடி.
வெளுத்து, நைந்த
நூல் புடவை.
கையில் துணிப்பை.
உள்ளே இன்னொரு
பழைய புடவை
இருக்கலாம்.
நலிந்த, புறங்கையில்
இரத்தம்.
உற்றுப் பார்த்தபோது தான்
தெரிந்தது,
அழுது கொண்டிருந்தாள்.
இவள் ஏன் என் தாயை
நினைவு படுத்துகிறாள்..?
இவர்கள், நகரங்களிலிருந்து
வெளி வந்து கொண்டே இருககிறார்கள்.
மகனிடமிருந்தோ,
மகளிடமிருந்தோ,
அன்று கிளம்பிய என் தாய்
ஊர் சென்று சேரவே இல்லை.
இவள் ஊர் எதுவென்று
தெரியவில்லை..,
Comments
Post a Comment