பச்சைமலை, கொல்லிமலை, மேகமலை..! -1.
சுற்றுலா செல்வது என்பது மனதுக்கு மிக நெருக்கமான, அளவில்லாத மகிழ்ச்சியை தரக்கூடியதாக, வாழ்க்கையின் சிடுக்குகளை மறந்து மனம், உடல் ஆகியவற்றை புதுப்பித்து, வரப்போகும் நாட்களை புத்துணர்வோடு எதிர்கொள்ள உதவுகின்றது.
நண்பர்களோடு கூட்டமாக செல்லும் சுற்றுலா நிகழ்வுகளில், மனமகிழ்ச்சிக்கு பஞ்சமே இல்லை. கிளம்பும் நேரம் தொட்டு திரும்பி வரும் வரை ஒவ்வொரு நொடியும், நிகழ்வுகள் ஒவ்வொன்றும் சந்தோஷ துளிகளாக மனதில் பதிந்துவிடுகிறது.
அதிலும் குறிப்பாக, மலைகள், அருவிப்பகுதிகளுக்கு செல்லும் போது, மனது துள்ளல் ஆட்டம் போடுகின்றது.
மலையின் உச்சி பகுதிக்கு சென்று, நுரையீரல் திணறும் வரை, முழுக்க காற்றை உள்ளிழுத்து, சுவாசிக்கும் போது கிடைக்கும் சுகம் இதுவரை வேறு எதிலும் கிடைத்ததாய் எனக்கு நினைவில்லை.
மனது இனிக்க, இனிக்க குழுவாக சென்ற சில சுற்றுலா பகுதிகளை பற்றி இந்த தொடரில் காணலாம்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற வெகு ஜன மக்கள் பகுதிகள், சமவெளியின் சந்தடி மிகுந்த நகரங்கள் போலவே மாறி விட்டன. ஏரி, படகு, குதிரை சவாரி, தாவரவியல் பூங்கா, ரோஸ் கார்டன், எல்லா இடத்திலும் மக்கள் நெருக்கடி, ஸ்வெட்டர் மற்றும் தொப்பிகள், கேரட், கை கோர்த்த ஜோடிகள், கடுமையான டிராபிக், ஹோட்டலில் கூட்டம், காத்திருப்பு, அதிக விலை என்று இப்பகுதிகளின் முன்பிருந்த முகங்கள் மாறி, இயற்கையையும் தொலைத்து நிற்கின்றன.
இன்னும் தீண்டப்படாத, மாசுபடாத இயற்கையினை, பொறுமையாக ரசிக்க, அனுபவிக்க விரும்பினால், இந்த இடங்களை விட்டு விடுங்கள். நாங்கள் சென்ற இடங்களை பாருங்கள்.
அங்கே,
மலைச்சரிவுகளின் பசுமையை நீண்ட நேரம் எவ்வித தொந்தரவும் இன்றி ரசிக்கலாம். வாகன புகை கலப்பில்லாத, மூலிகை வாசனையுடன் வீசும் காற்றை சுவாசிக்கலாம். அழகிய காட்டில் நடை செல்லலாம். அருவிகளில் உடல் நடுங்கி, உறையும் வரை குளிக்கலாம். கம்பு வைத்துக் கொண்டு யாரும் விரட்ட மாட்டார்கள்.
ஓங்கி, உயர்ந்த அடர்த்தியான மரங்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகளின் பல்வேறு ஒலிகள், வெள்ளந்தியான மலைக் குடி மக்கள் என, துன்பம் மிகுந்த இந்த உலகத்தை விட்டு அளவில்லாத இன்பம் காண வேண்டி, கடவுள் படைத்த பகுதிக்கு செல்வது போல, உங்கள் மனம் இனிக்கும். வாருங்கள் சேர்ந்து பயணிப்போம்.!
பயணம் தொடரும்..,
Comments
Post a Comment