சிறந்த தமிழ் சிறுகதைகள் - ஒரு வாசிப்பனுபவம் - 1
சிறுகதை வாசித்தல் என்பது எப்போதும் மிக பிடித்தமான, மனதிற்கு நெருக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. மனிதர்களின் பல்வேறு விதமான வாழ்க்கை அனுபவங்களை, சந்தோஷத்தை, துயரத்தை, துரோகத்தை, அவமானத்தை, இழிவை, மனதின் ஆழத்தில் மறக்க, மறைக்க விரும்பும் பதிவுகளை, குறுகிய நிமிடங்களில் நம் மேல் சுமத்தி, நம்மையும் தன்னுள்ளே இழுத்து போடும் புதைகுழி தான் சிறுகதைகள். பலரின் வாழ்வை நாம் வாழ்ந்து பார்க்கும் அனுபவம் சிறுகதைகளை வாசிக்கையில் கிடைக்கிறது. எனவே தான் எப்போதும் மனதுக்கு உகந்த செயலாக இருந்து வருகிறது.
காலத்தை சுருட்டி வைத்துள்ள கருந்துளைகள் போல, சிறுகதைகள் வாழ்க்கை அனுபவங்களை தன்னுள்ளே வைத்திருக்கின்றன. இவற்றின் உள்ளே நுழையும் போது, வாசிப்பவரின் காலம் உறைந்து போவது நிச்சயம்.
ஒரு பக்க கதை, குறுங்கதை, சில நொடி கதைகள் என்று, உடைக்கப்பட்ட கோவில் சிலைகளின் முகங்கள் போல, சிறுகதைகளின் முகமும் சிதைந்து கொண்டிருக்கின்ற இந்த நாட்களில், அனைத்து இலக்கணங்களும் அமைந்து, படைப்பின் உச்சத்தை தொட்ட, இந்த நல்ல சிறுகதைகளுக்கும், எனக்குமான அனுபவங்கள் இத்தொகுப்பு.
கவிதையும், சிறுகதையும் மனதை வசீகரிக்கும் மாய விசை கொண்டவை. இதிலுள்ள கதைகளை படிக்கும் போது உங்களுக்கும் பித்து பிடிப்பது உறுதி. வாசிப்பின்பம் என்னும் பித்து. அது நல்லதே. உங்களை மேலும் தேடி, தேடி வாசிக்க வைக்கும்.
இந்நூலில் உள்ள சிறுகதைகளை எழுதிய படைப்பாளிகளுக்கு அறிமுகம் தேவையில்லை. உலக அளவில், தமிழ் மொழியின் முகங்கள் இவர்கள். தமிழ் புனைவு இலக்கியத்தை பல்வேறு தளங்களுக்கு உயர்த்தியவர்கள்.
நல்ல இலக்கியம் என்பது, நம் மனதின் அடியாழத்தில் இருக்கும் படைப்பூக்கத்தை தூண்டுவது. இந்த சிறுகதைகள் வாசிக்கும் போது, கண்டிப்பாக உங்களையும் எழுத தூண்டும்.
இவை முற்றிலும் எனக்கு பிடித்த கதைகள், என்னை பாதித்த கதைகள் என்ற அளவுகோலை மட்டுமே வைத்து தேர்வு செய்யப்பட்டவை. நான் ரசித்த சிறுகதைகளின், ரசனை மிகு உலகிற்கு உங்களை வரவேற்கிறேன்.
Comments
Post a Comment